யாழில் உணவு பண்டங்களின் விலை தொடர்பில் மக்கள் குற்றச்சாட்டு
யாழில் உணவு பண்டங்கள் விலை குறையவில்லை என்றும் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கை போதுமானதல்ல எனவும் மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
எரிவாயுவின் விலை உயர்வைக் காரணம் காட்டி உணவு பண்டங்களின் விலைகளை உயர்த்திய யாழ். மாவட்ட உணவகங்கள் எரிவாயுவின் விலை சுமார் 1,500 ரூபாவால் ஒரே மாதத்தில் குறைந்த நிலையில் உணவு பண்டங்களின் விலைகளைக் குறைக்காது விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ். மாவட்டத்தில் அநேகமான உணவகங்கள் எரிவாயு விலையைக் காரணம் காட்டி உணவு பண்டங்களின் விலைகளை திடீர் திடீரென அதிகரித்தன.
மக்கள் கேள்வி
மதிய சைவ உணவு ஒரு பார்சல் ஆறுநூறு ரூபாய், அசைவ உணவு ஆகக் குறைந்தது ஆயிரம் ரூபா, றோல் ஒன்றின் விலை நூறு ரூபா எனப் பல தின்பண்டங்களில் விலைகள் சடுதியாக அதிகரித்தன.
எரிவாயு சிலிண்டர் ஒன்று 5 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்த போது உணவகங்களில் விற்கப்பட்ட விலைகள் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்ட போது ஏன் குறையவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல குளிர்பான நிலையங்களில் விற்கப்படும் றோல் ஒன்று இன்னும் 100 ரூபாயாக விற்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சில உணவகங்கள் காலை உணவுக்காக அனைவரும் விரும்பி உண்ணும் பரோட்டாவைச் சிறு அளவு மாற்றம் செய்து ஒரு ஜோடி அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகரித்த விலையில் விற்பனை
ஆகவே யாழ். மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற மாவட்ட பாவனையாளர் அதிகார சபை குறித்த விடயம் தொடர்பில் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபைக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது உணவு பண்டங்களை அதிகரித்த விலையில் விற்பனை செய்யும் உணவகங்கள் தொடர்பில் தமது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |