மலையகத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் - உதவிக்கரம் நீட்டிய இந்தியா
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட 391 குடும்பங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
கண்டி இந்திய உதவி தூதரகத்தின் உதவி தூதுவர் வி.எஸ்.சரண்யா தலைமையில் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (13.08.2026) நடைபெற்றுள்ளது.
கொட்டகலை பிரதேசசபையின் தலைவர் ராஜமணி பிரசாத் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவும், அவரது ஏற்பாட்டிலும் இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்கள்
கடந்த காலங்களில் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுத்திருந்தனர்.
இதனால் பல குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக கொட்டகலை, ரொப்கில், மவுண்ட்வேர்னன், எரின்டன், தலவாக்கலை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்த நிவாரண உதவியைப் பெற்றுக் கொண்டனர்.
உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 5000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அயல்நாடான இந்தியா தொடர்ச்சியாக வழங்கிவரும் மனிதாபிமான உதவிகளின் ஒரு பகுதியாக இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத், தலவாக்கலை பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் பத்திநாயக்க, பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri