இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடி காண்பித்தவர்களை இலக்கு வைத்ததாக குறிப்பிட்ட சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெள்ளைக் கொடிகளை காண்பித்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சர்வதேசத்திடம் கூறியதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளிநாட்டில் ஒன்றை குறிப்பிடுவதாகவும் உள்நாட்டில் வேறொன்றை கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடி விவகாரம்
தற்பொழுது சரத் பொன்சேகா ஓர் அரசியல்வாதியாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் போர் நிறைவிற்குக் கொண்டு வரப்பட்ட போது சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக கடமையாற்றியவர் எனவும் அவர் தொடர்பில் மிகுந்த கௌரவம் உண்டு எனவும், அவரது மனம் நோகும் வகையில் தாம் எதனையும் கூறப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் வெள்ளைக் கொடி கதையை சரத் பொன்சேகா கூறாமல் இருந்திருந்தால் நல்லது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
சரத் பொன்சேகா சர்வதேசத்தின் மத்தியில் வெள்ளைக் கொடி கதையை கூறாமல் இருந்திருந்தால் படைவீரர்களுக்கு எதிராக சர்வதேச ரீதியில் போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தில் ஒரு கதையையும் இலங்கையில் பிரிதொரு கதையையும் அவர் கூறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா மறுப்பு
இறுதிக் கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய முயற்சித்த போது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சரத் பொன்சேகா சர்வதேசத்திடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டு திரும்பும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது நாமல் ராஜபக்ச இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா, புலிகளுக்கு எதிரான போரை தாமே முன்னெடுத்ததாக வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது நாமல் ராஜபக்ச இந்த பதில்களை வழங்கியிருந்தார்.
இதேவேளை, வெள்ளைக் கொடி விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளைக் கொடிகளை ஏந்திய புலிப் போராளிகள் மீது சுட்டதாக சரத் பொன்சேகா கூறினார் என சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் தாம் அவ்வாறு குறிப்பிடவில்லை என சரத் பொன்சேகா பின்னர் மறுப்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
