கிட்டங்கி வீதியில் வெள்ள நீர் பரவல்! போக்குவரத்து பாதிப்பு
கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் காரணமாக துரைவந்தியமேடு கிராமத்தின் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் இரவு கடமையில் அப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிட்டங்கி வீதி அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி செல்வதை அவதானிக்க முடிகின்றது.
கல்முனை மாநகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்வதால் இன்று போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமை
அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே பெய்யும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் பல வீதிகளில் போக்குவரத்துக்காக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கல்முனை நாவிதன்வெளி பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வீதியால் நீர் பாய்வதால் துரவந்திய மேடு கிராமத்துக்கு செல்வதற்கான பாதைகள் மூடப்பட்டு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலை உருவாகியுள்ளது.
இதே வேளை இந்த வீதியில் ஆற்றுவாழைகள் பரவியிருப்பதால் போக்குவரத்துக்கு பாரிய இடையூறு ஏற்பட்டிருந்தது.
கோரிக்கை
இந்த ஆற்றுவாழைகளை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபை முன்னெடுத்துள்ளதுடன் நாவிதன்வெளி பிரதேச செயலகம் பிரதேச சபை என்பன பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ள நீர் பரவி வருவதால் பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








