15 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு.. கொட்டகலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
சீரற்ற காலநிலையின் போது ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்த கொட்டகலை மேபீல்ட் மற்றும் சாமஸ்ட்டன் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மழைக்காலங்களில் குறித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, மேபீல்ட் மற்றும் சாமஸ்ட்டன் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளநீரில் மூழ்குவதுடன், மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வந்துள்ளன.
அத்துடன், வெள்ளப்பெருக்கு காரணமாக மேபீல்ட் தமிழ் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகளும் பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி யேசுதாசன் யாகுலமேரி மற்றும் பிரதேச சபை உறுப்பினர் கணேசன் ராஜேந்திரன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெள்ள அச்சம்..
இதற்கமைய, மத்திய மாகாண சபை நிதியிலிருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேபீல்ட் பகுதியில் அமைந்துள்ள ஆற்றை அகலப்படுத்தி, ஆழப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில், நேற்று இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், தற்போது ஆற்றை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் மழைக்காலங்களில் ஆற்றில் நீரின் ஓட்டம் அதிகரிக்கும் போது ஏற்படும் நீர்த்தேக்கம் குறைக்கப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரிடமும் ஆற்றை அகலப்படுத்தி வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தமது நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமது பிரச்சினையை கருத்திற்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்து வேலைத்திட்டத்தை முன்னெடுத்த கொட்டகலை பிரதேச சபையின் தலைவர், உப தலைவி மற்றும் உறுப்பினருக்கு மக்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக மழை பெய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெள்ள அச்சத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்கு, ஆற்றை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் இந்த வேலைத்திட்டம் நீண்டகால நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.