சீரற்ற காலநிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு தண்ணீருற்று கிராமம்: சிரமத்தில் மக்கள் (Photos)
முல்லைத்தீவு தண்ணீருற்றில் வீதிகளை குறுக்கறுக்கும் வெள்ளத்தினால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வழமைக்கு மாறாக ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சி மூலம் அதிகரித்த வெள்ளத்தினால் வீதிகளின் ஓரங்களில் உள்ள வடிகால்களின் கொள்ளளவிலும் கூடிய நீர் வரத்தால் வெள்ளம் வீதிகளை மூடிப் பாய்கின்றது.
தண்ணீரூற்று சைவப் பாடசாலை வீதியில் வெள்ளம்
தண்ணீரூற்று சைவப் பாடசாலை வீதியில் இரு இடங்களில் வீதிக்கு மேலாக வீதியை குறுக்கறுத்து வெள்ளம் பாய்கின்றது.
நீரோட்டத்தின் உயரம் மூன்று அடிகளாக இருப்பதாகவும் அந்த வீதியைப் பயன்படுத்துவோர் குறிப்பிடுகின்றனர். இரு கிளை வீதிகள் சந்திக்கும் இடங்களிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
தண்ணீரூற்று குமுழமுனை வீதியை சைவப் பாடசாலை வீதியுடன் இணைக்கும் கிளை வீதியில் உள்ள வாய்க்கால் கொள்ளளவிலும் கூடிய நீரோட்டத்தினால் அது வீதியின் இணைப்பை குறுக்கறுத்து பாய்கின்றது.

இலங்கை மக்களை நசுக்கும் வற் வரி : ஆடம்பர கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள்
தண்ணீரூற்று புளியங்குளம் வீதியை சைவப் பாடசாலை வீதியுடன் இணைக்கும் கிளை வீதியிலும் இதே அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த இணைப்பு தாழ்வுப் பாலத்தினைக் கொண்டிருக்கின்றது.
எனினும் வீதிக்கு குறுக்கான நீரோட்டத்தின் உயரம் அதிகமாக இருப்பதால் அதனூடாக பயணிப்போர் சிரமங்களுக்கு உள்ளாவதாக குறிப்பிடுகின்றனர்.
மழையின் தீவிரம் குறையாததால் இந்த தாக்கத்தினளவு நாளுக்கு நாள் அதிகரிக்கலாம் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குமுழமுனை தண்ணீரூற்று வீதியில் உள்ள அபாயம்
வீதிகளில் எதிர்பாராத இடங்களில் எல்லாம் வீதிக்கு மேலாக தண்ணீர் பல அடி உயரங்களுக்கு பாய்வதால் மழைநேரங்களில் பயணங்களை தவிர்த்துக் கொள்வது அனர்த்தங்களை தவிர்க்க உதவும் என வயலுக்கு சென்று திரும்பும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
முன்பெல்லாம் வீதியை குறுக்கறுத்து நீர் பாயாத இடங்களிலெல்லாம் இப்போது பாய்கின்றது. மழை பொழியும் நேரங்களில் நீரோட்டம் அதிகமாவதையும் மழை குறையும் போது நீரோட்டமும் குறைவதனையும் அவதானிக்கலாம் என மேலும் அவர்களில் பலர் குறிப்பிடுகின்றனர்.
குமுழமுனை தண்ணீரூற்று வீதியின் கணுக்கேணி குளத்திற்கு கீழாகவுள்ள வீதியின் பிரதான பெரிய பாலங்களை தண்ணீர் மேவிப்பாயும் ஆபத்துக்கள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்தால் பாலங்களை மேவி நீரோட்டம் வீதிக்கு குறுக்காக பாயும் என திடமாக அவர்கள் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
உயரமாக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட இந்த வீதியின் திருத்தத்திற்கு முன்னர் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வீதிக்கு குறுக்காக மூன்றடி உயரத்திற்கு நீரோட்டம் இருக்கும் என ஒருவர் தன் பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
இயற்கையாகவே தாழ் நிலங்களை கொண்ட இடம்
தணணீரூற்றின் பல இடங்கள் இயல்பாகவே தாழ்நிலங்களாகவும் நீர்க்கசிவு கொண்டவையாகவும் இருப்பதனால் விரைவாக வெள்ளம் ஏற்படும் எனவும் இருப்பினும் விரைவாக அந்த வெள்ளநீர் வடிந்தோடிவிடும் எனவும் குறிப்பிடும் தண்ணீரூற்று முதியவர் ஒருவர் மழை பெய்து கொண்டிருக்கும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். அந்த நேரங்களில் அதிக நீரோட்டம் இருக்கும் எனவும் தண்ணீரூற்றில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் பாய்வது தொடர்பில் கருத்துக்களை கேட்டபோது பகிர்ந்து கொண்டார்.
இந்த முறை மழையினால் கிடைத்த நீரினால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை ஊற்றுக் கசிவினால் நீரோட்டம் இருக்கும். இதனால் சிற்றாறுகள் தோன்றிப் பாயும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்
காலநிலை அவதானிப்பகத்தினால் வடக்கில் தொடர்ந்து மழைப்பொழிவு நிகழும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாழ் நிலங்களில் நிரம்பும் நீரினால் வீதிகளை மேவிப்பாயும் நீரோட்டங்கள் அடிக்கடி தோன்றலாம் எனவும், அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு வீதிகளில் பயணிப்போர் முன்னெச்சரிக்கையோடு தங்கள் பயணங்களை திட்டமிட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவில் பணியாற்றங்கூடிய அதிகாரியொருவர் வீதிக்கு குறுக்கான நீரோட்டம் பற்றிக் கேட்டபோது குறிப்பிட்டார்.
மழைநேரங்களில் ஏற்படக்கூடிய வாகன விபத்துக்களையும் இயற்கை அனர்த்தங்களையும் முன்னெச்சரிக்கையோடு இருப்பதன் மூலம் இழிவளவாக்க முடியும்.
பொது மக்கள்
பொறுப்புணர்ச்சியோடு செயற்படுதல் அனைவருக்கும் நன்மையளிக்கும் என அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.






சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
