வெள்ள அபாய எச்சரிக்கை
அத்தனகலு ஓயா, களு கங்கை, களனி கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முன்னறிவிப்புகளின்படி, இன்று இரவு முதல் அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்.
வெள்ள அபாய எச்சரிக்கை
அத்தனகலு, களு கங்கை, களனி கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியன ஏற்கனவே நீர் நிரம்பியுள்ளதால், அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் அதிக மழை பெய்தால், சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு, குறித்த ஆற்றுப்படுகைகளில் வசிக்கும் பொதுமக்கள், அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டில் வெள்ளம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின்படி, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, கிழக்கு, வடகிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,214 பேர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மற்றும் குருநாகல் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளத்தினால் 95 வீடுகள் பகுதியளவிலும் இரண்டு வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
தொடரும் மழையுடனான காலநிலை
மேலும், நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.