இலங்கையின் பல பகுதிகளில் தீவிரமடையும் காலநிலை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நுவரெலியா, கண்டி உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் இன்று (24) அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன், பல பகுதிகளில் பனிமூட்டம் காணப்படுவதால், வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இயக்குமாறு சாரதிகளிடம் ஹட்டன் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.

அந்தவகையில் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்கள் வான்பாயும் அளவை எட்டியுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர். மேலும், சில பகுதிகளில் சிறிய அளவிலான மண்சரிவு அபாயங்களும் இடம்பெற்றுள்ளன.
தொடர் மழை காரணமாக தோட்டத் தொழிலாளர்கள், கட்டடக் கலைத் தொழிலாளர்கள் (மேசன்) மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர்களின் வருகைப் பதிவு குறைவாகக் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
சீரற்ற காலநிலை நீடிப்பதால் ஆறுகளில் நீராடுவதையோ, நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிடச் செல்வதையோ மற்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளுக்குப் பயணிப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தீவிரமடைந்து வரும் நிலையில் களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் நீரேந்தும் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த பகுதியிலுள்ள சிறிய வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு
இதேவேளை மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை 10.30 மணியளவில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஊடாக நீர் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டயகம பகுதியில் ஆரம்பமாகும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், அப்பகுதியில் இருந்து நீர் பெறும் பல ஓடைகளிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அதிகளவில் நீர் வரத்து ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக வான்கதவு திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக களனி கங்கை மற்றும் மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றங்கரைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்த்து, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam