கிழக்கு ஆபிரிக்காவில் கடும் வெள்ளம்: நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு
கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் (Tanzania) நிலவி வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சுமார் 155 பேர் பலியாகியுள்ளனரென செய்திகள் வெளியாகியுள்ளன.
பல வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 236 பேர் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதிகளில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது, 200,000இற்கும் அதிகமான மக்கள் மற்றும் 51,000 குடும்பங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றம்
இந்நிலையில், அந்நாட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவசர சேவைகளினால் மீட்டு வரப்பட்டு வருகின்றனர்.
ஆபிரிக்க நாடுகளில் பொதுவாக காணப்படும் எல் நினோ காலநிலையில் (El Nino climate) தொடர் மழையால் ஏற்பட்டுள்ள மாற்றமே இத்தகைய பாதிப்புக்கு காரணம் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
எல் நினோ என்பது இயற்கையாக நிகழும் காலநிலை வடிவமாகும். இது பொதுவாக உலகளவில் அதிகரித்த வெப்பம், அத்துடன் வறட்சி மற்றும் கனமழை ஆகியவற்றுடன் தொடர்புடையது.
இதன் காரணமாக, கடும் எல் நினோ மழை, பலத்த காற்று, வெள்ளம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஆகியவை அதிகரித்து கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |