கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் ஐயாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக 2520 விவசாயிகள் விண்ணப்பித்துள்ள போதும் 296 ஏக்கருக்குரிய 230 விவசாயிகளுக்கு மாத்திரமே 2.7 மில்லியன் ரூபா மாத்திரமே இழப்பீடாக வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய மழை வெள்ளம் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பெருமளவான நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்கள் அழிவடைந்திருந்தன.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு மற்றும் இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டமையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்பட்டதுடன் நெல் அறுவடை செய்யாத நிலையில் பெரும் அழிவுகளையும் விவசாயிகள் எதிர்கொண்டிருந்தனர்.
அழிவு மதிப்பீடுகள்
இதனால் சுமார் ஐயாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் அழிவடைந்ததாக 2520 விவசாயிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கம நல சேவை நிலையங்களினூடாக ஊடாக விண்ணப்பித்திருந்தனர்.
இந்தநிலையில் வெள்ளத்தால் அழிவடைந்த பயிர்களை மதிப்பீடு மேற்கொண்ட காப்புறுதி திணைக்கள அதிகாரிகள் நோய் மற்றும் களைகளின் தாக்கம் என அழிவு மதிப்பீடுகளை தட்டிக்கழித்து 296 ஏக்கர் மாத்திரமே அழிவடைந்ததாகவும் இதனால் 230 விவசாயிகள் மாத்திரமே பாதிக்கப்பட்டதாகவும் இதற்கான இழப்பீடாக 2.7 மில்லியன் ரூபா மாத்திரமே வழங்கப்பட உள்ளது.
ஆனாலும் வடமாகணத்தின் ஒரே தன்மை கொண்ட வவுனியா மாவட்டத்தில் 1340.2 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாகவும் இதனால் 912 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் இவர்களுக்கு 16.81 மில்லியன் ரூபா இழப்பீடுகளை வழங்குதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இழப்பீட்டுத் தொகை
அதேபோல மன்னார் மாவட்டத்தில் ஒன்பது ஆயிரத்து 228 ஏக்கருக்குரிய 4285 விவசாயிகளுக்கு 126 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.
ஆனால் அதிக பாதிப்பை எதிர்க்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதை தட்டி கழித்து குறைந்த அளவான பயிர் நிலங்கள்.
அழிவடைந்ததாக தெரிவித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன இதே நேரம் கிளிநொச்சி மாவட்டத்துக்கான காப்புறுதி திணைக்களத்தினுடைய உதவி பணிப்பாளர் இல்லாத நிலையில் பதில் பணிப்பாளர் ஒருவரே கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றமையம் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை காரணமாகவே இந்த பாரபட்சமான அழிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |