முல்லைத்தீவு உப்புமாவெளி துண்டாய் வடக்கு கிராமங்களில் வெள்ளம்: அவதியுறும் மக்கள்(Photos)
முல்லைத்தீவிலிருந்து ஆறு கிலோமீற்றர் தெற்காக திருகோணமலை பிராதன வீதியில் இரு மருங்கிலுமுள்ள உப்புமாவெளி, துண்டாய் வடக்கு கிராமங்களில் வெள்ளத்தினால் அதிக இடர்களை அந்த கிராம மக்கள் எதிர்கொள்கின்றனர்.
முல்லைத்தீவில் பெய்து வரும் மழையினால் உப்புமாவெளி கிராமத்தில் குடியிருப்புக்களுக்குள் வெள்ளம் புகுத்துள்ளது. துண்டாய் வடக்கு கிராமத்திற்கு செல்லும் பாதைகள் வெள்ளத்தால் குறுக்கறுத்து போக்குவரத்திற்கு தடையேற்படுத்தியவாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்
4ம் கட்டை,உப்புமாவெளி என்ற இடத்தில் உள்ள மூன்று வீடுகளுக்குள் சென்ற வெள்ளத்தினால் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வீடு முழுமையாக வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளது.மற்றொரு வீட்டின் சமயலறை முழுவதும் வெள்ளத்தால் நிரம்பியுள்ளது.வீட்டினைச் சூழவுள்ள பகுதிகளில் மூன்றடிக்கு தண்ணீர் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
அவற்றை நேரில் அவதானிக்கவும் முடிந்தது. வயதான பெண்ணொருவர் குறிப்பிடும் போது பிறந்த காலம் முதல் இங்கேயே வாழ்ந்து வரும் தனக்கு இது போல ஒரு அனுபவம் இதுவரை வந்ததில்லை என குறிப்பிட்டுச் சொல்கின்றார்.
வீட்டுக்குப் பின்னுள்ள வில்லுக்குளத்தின் அயலில் உள்ளவர்கள் தங்கள் காணிகளில் மேற்கொண்ட மாற்றங்களினால் குளத்தில் சேரும் தண்ணீர் கடலுக்குப் போவதில் ஏற்படும் தடங்களாலேயே இந்த இடர் தோன்றியதாக மேலும் குறிப்பிட்டார்.
வில்லுக் குளத்திற்கு முன்னாக வீதியோரமாக உள்ள வீடுகளுக்கு பின்னால் வீட்டோரமாக அதிகளவு நீர் சேர்ந்திருப்பதனை அவதானிக்கலாம்.மக்களின் இயல்பு வாழ்க்கையை இது பெருமளவில் பாதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வியாபார நிலையம் ஒன்றும் அடிக்கடி தோன்றி மறையும் அதிகளவான வெள்ளத்தால் பாதிக்கப்படுவதனையும் அவதானிக்கலாம்.கடைக்குள்ளும் ஒருமுறை வெள்ளம் புகுந்து கொண்டதாக வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்ட கைது விவகாரம்: ஆச்சரியம் அடைந்த ஜனாதிபதி- சாணக்கியன் வெளிப்படுத்திய தகவல் (Video)
வீதிகளை மேவிய வில்லுக் குளத்து நீர்
முல்லைத்தீவு திருகோணமலை வீதியின் கிழக்கில் கடலுக்கும் வீதிக்கும் இடையில் செம்மலை வரை பரந்துள்ள நன்னீர் தேக்கம் வில்லுக் குளமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கோடை காலங்களில் ஆழம் குறைந்ததாகவும் நீர்வாழ் புற்களையும் தாமரை,அல்லிகளையும் அதிகம் கொண்ட நன்னீர் மீன் பிடித் தளமாகவும் எருமைகளின் மேச்சல் தளமாகவும் இது இருக்கின்றது.
மாரிகாலங்களில் வில்லுக்குளம் நீரால் நிரம்பிக் கொள்கின்றது. அதன் கொள்ளளவிலும் கூடியளவில் நீரின் வரத்து விரைவில் அதிகரிக்கும் போது துண்டாய் வடக்கு, சுடலையடி பாதை ஆகிய இடங்களூடாக தண்ணீர் பெருங்கடலை (இந்து சமுத்திரம்) சேர்ந்துவிடும்.
ஆனாலும் இம்முறை கடலோடு கலக்கும் வழித்தடம் தூர்ந்துள்ளதோடு காணிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களும் சட்டவிரோத மண்ணகழ்வுகளாலும் இயல்பான நீர்போக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆவ்வூரைச் சேர்ந்த பல வயதானவர்களோடு பேசியபோது அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்து வருடங்களுக்கு ஒருமுறை இப்படி கடும் மழையும் அதனால் வெள்ளமும் இந்த இடங்களில் வருவது வழமை என போல் ராஜ் என்ற பெரியவர் தன் நினைவுகளை மீட்டு பகிர்ந்து கொண்டார்.
நான்காம் கட்டைச் சந்தி என மக்களால் அழைக்கப்படும் இடத்திலிருந்து கடற்கரைக்கு செல்லும் பாதையில் நான்கு அடிக்கும் மேலாக வில்லுக்குளத்தின் நீர் இரு இடங்களில் குறுக்கறுத்து பாய்கின்றது.
பல்லுயிர் உணவு பண்ணையொன்றின் பொருத்தமற்ற செயற்பாடுகளாலேயே பாதையை குறுக்கறுத்து நீர் இந்தளவு உயரத்துக்கு பாய்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த வீதியில் முன்னர் வில்லுக்குள நீர் குறுக்கறுத்து போதும் அது விரைவாக பாய்ந்து விடும் என மேலும் குறிப்பிட்டார்.
துண்டாய் வடக்கு வீதியிலும் வெள்ளம்
துண்டாய் வடக்கு கிராமத்திற்கு செல்லும் பாதையும் மூன்று இடங்களில் வெள்ள நீரால் மறிக்கப்பட்டு போக்குவரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவதனை அவதானிக்கலாம்.
கொங்கிறீற்று வீதியாக இருக்கும் வில்லுக்குளத்தினை குறுக்கறுத்து அமைக்கப்பட்ட இந்த துண்டாய் வடக்கு வீதியிலும் ஏனைய இரு இடங்களிலும் வெள்ளத்தினூடாக பயனிப்பதற்கு அச்சமாக இருப்பதாக தொழிலுக்காக மோட்டார் சைக்கிளில் பயனிப்போர் குறிப்பிடுகின்றனர்.
நீரின் ஆழம் தொடர்பிலேயே தாம் அச்சப்படுவதாகவும் ஆழம் அடிக்கடி மாறிக்கொள்வதாலேயே இந்த அச்சம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
வெள்ளத்தினை கடலுக்கு அனுப்பும் முயற்சி
துண்டாய் வடக்கு கிராமம் ஒரு கடற்கரைக் கிராமம் என்பது நோக்கத்தக்கது. இரு இடங்களில் வெள்ளம் கடலுக்குச் செல்வதற்காக வாய்க்கால் அமைக்கப்பட்டு தொடுவாய் திறக்கப்பட்டுள்ளது.
எனினும் நீரோட்டம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியதாக இருந்ததையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சுடலையடி பாதை வழியிலேயே கடலுடன் நீர் கலப்பதனை சாத்தியமாக்கியிருக்க வேண்டும்.
அப்போது தான் வெள்ளம் விரைவாக வடியும் எனவும் முன்னர் சின்னத்துரை என்பவர் இப்படி வெள்ளத்தினை வெளியேற்றியிருந்தார் என தன் நினைவை மற்றொரு வயோதிபர் பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அப்போது உருவாக்கப்பட்ட தொடுவாய்கள் இப்போதும் இருக்கின்றன.அவற்றின் தொழிற்பாடு அவற்றின் உருமாறலோடு குறைந்து சென்றுள்ளதனையும் குறிப்பிடலாம்.
ஒருங்கிணைந்ததும் பொருத்தப்பாடு உள்ளதுமான விரைவான செயற்பாடுகளே அனர்த்தங்களிலிருந்து தம்மை விடுவிக்க நல்ல வழி என்பது மக்களால் இதுவரையும் புரிந்துக் கெள்ளப்படவில்லை என்பது கண்கூடு.

