பாடசாலைகளில் சமத்தில் பறந்த கொடிகள்: விசனம் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள்
வன்னியில் பாடசாலைகளுக்கிடையில் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நடந்து முடிந்திருந்தன.
இன்னும் சில பாடசாலைகளில் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் சமத்தில் பறந்த கொடிகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் தங்கள் அதிருப்தியினை வெளியிடுகின்றனர்.
ஒரு நாட்டின் தேசிய கொடி என்பது அந்த நாட்டின் வீரமிகு தியாகங்களின் அடையாளமாக இருக்கும்.அத்தோடு அந்நாட்டின் குறியீட்டு வடிவ பெயராகவும் அமையும்.
ஒரு நாட்டின் மதிப்புமிக்க சின்னங்களில் தேசிய கொடியும் இலச்சினையும் முதன்மையானவையாகும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
சமத்தில் பறந்த தேசிய கொடி
வன்னியில் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்று முடிந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகளின் போது தேசிய கொடியினை சமத்தில் பறக்கவிட்டிருந்தனர்.
இது தொடர்பில் பொருத்தமான கவனமெடுப்புக்களை கல்வி வலயங்கள் எடுக்கத் தவறியிருந்தமை கவலைக்குரிய விடயமாகும்.
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட பல பாடசாலைகளில் இந்நிலையினை அவதானிக்க முடிந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக் கொடியும் இல்லக் கொடிகளும் தேசிய கொடியின் மட்டத்தில் பறக்கவிடப்படுவது தவறான செயற்பாடாகும்.
விளையாட்டுப் போட்டி நிகழ்வின் போது மைதானத்தின் நடுவில் இவ்வாறு கொடிகள் பறக்கவிடப்படுவது தொடர்பில் அதிகமான பாடசாலைகள் ஒத்த தன்மையினைக் கொண்டிருந்தன.
முல்லைத்தீவில் கல்வி வலயத்தில் உள்ள அதிகமான பாடசாலைகளில் இந்த தவறினை அவதானிக்க முடிந்ததாக சமூக ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொடிகள் எப்படி பறக்கவிடப்பட வேண்டும்
முதன்மை நிறுவனங்கள் அடிப்படையில் கொடிகளின் உயரங்கள் அமைய வேண்டும்.
பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது நாட்டின் தேசிய கொடி ஏற்றப்படுவதோடு பாடசாலைக் கொடி மற்றும் இல்லக் கொடிகளும் ஏற்றப்படுகின்றன.
வன்னியின் புகழ்பூத்த கிராமம் ஒன்றின் பாடசாலையில் சாரணர் இயக்கத்தின் கொடியும் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது ஏற்றப்பட்டதோடு இல்ல மாணவர்களின் அணிவகுப்புடன் சாரணிய மாணவர்களின் அணிவகுப்பும் நடைபெற்றிருந்தது.
இதனால் தேசிய கொடி அதனையடுத்து பாடசாலைக் கொடி பின்னர் சாரணியக் கொடி என ஏற்றப்பட்டு இல்லக் கொடிகளும் ஏற்றப்படும்.
எல்லாக் கொடிகளையும் விட உயரமாக இருக்கும் வகையில் தேசிய கொடி பறக்கும்.அதற்கு கீழாக பாடசாலைக் கொடியும் அதுபோல ஏனைய இல்லக் கொடிகள் சம உயரத்தில் இருக்கும் வகையில் பறக்கும் என தன்னுடைய அனுபவத்தினை ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
அண்மைய நிகழ்வு தொடர்பில் அவரிடம் கருத்துக் கேட்ட வேளையில் " தேசிய கொடியும் பாடசாலைக் கொடியும் சம உயரங்களில் பறக்க விடக்கூடாது.தேசிய கொடி உயரமாகவும் பாடசாலைக் கொடி அதனைவிட குறைந்த உயரமாகவும் இருக்க வேண்டும்.
இல்லக் கொடிகள் அத்தனையும் ஒரேயளவான உயரங்களில் பாடசாலைக்கொடிக்கு குறைந்த உயரத்தில் பறக்க வேண்டும்.
எனினும் அவ்வாறில்லாதிருந்தமையானது பாடசாலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விட்ட தவறாக இது இருக்கலாம்." என் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தகுதி வாய்ந்தவர்கள் கொடியேற்ற வேண்டும்
நிகழ்வுகளின் போது தகுதியுடையோரே கொடிகளை ஏற்றுவதற்கு அழைக்கப்பட வேண்டும்.அப்படி அழைக்கப்படுபவர்களுக்கு கொடிகள் எப்படி பறக்கவிடப்பட வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும்.
வன்னிப் பாடசாலைகளில் தகுதியுடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்வாக விளையாட்டுப் போட்டிகள் அமைந்த போதும் அவர்களிலிருந்து தெரிவு செய்து அழைக்கப்பட்டவர்களால் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்ட போதும் எப்படி தவறு விடப்பட்டது என யோசிக்க வேண்டியுள்ளதாக சமூகவிடய ஆய்வுகளில் கவனம் செலுத்தும் தன்னார்வலர் ஒருவரிடம் கருத்துக் கேட்டபோது குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிகாரிகளும் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர் என்பதும் நோக்கத்தக்கது.
தேசிய கொடியினை ஏற்றிய பின்னர் பாடசாலைக் கொடி ஏற்றி வைக்கப்படும்.அந்த பாடசாலையின் அதிபராலேயே பொதுவாக பாடசாலைக் கொடி ஏற்றப்படும்.அப்படியிருக்கும் போது தேசிய கொடியை விட சற்றுக் குறைவான உயரத்தில் பாடசாலைக் கொடியினை பறக்கும் வண்ணம் ஏற்றியிருக்கலாம்.எனினும் அது பற்றி சிந்திக்கப்படாதது சுட்டிக்காட்டத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொடிகளின் உயரங்கள் தொடர்பில் விளையாட்டுத் துறை ஆசிரியர்களும் கவனமெடுக்காதது ஏன் என புரிந்துகொள்ள முடியவில்லை என நிகழ்ச்சி ஏற்பாடுகளில் அதிகம் ஈடுபட்டிருந்த ஒருவர் குறிப்பிடுகின்றார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் அதிகமான பொது நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த தன் அனுபவத்தினடிப்படையில் அவர் கருத்துக்களை எடுத்துரைத்து இருந்ததையும் இங்கே குறிப்பிடலாம்.
மாணவர்களுக்கு எதை கற்றுக்கொடுக்கும் போகிறார்கள்
விளையாட்டுப் போட்டி என்பது வெற்றியும் தோல்வியும் அது தரும் தாக்கமும் என மாணவர்களின் உடல் உள மேம்பாடு தொடர்பில் ஆரோக்கியமான கற்றல்களை வழங்குவதற்காக திட்டமிடப்படுவதாக இருக்கும்.
இந்த நிகழ்வானது சமூக தொடர்பாடலையும் போட்டியிடும் மனப்பான்மையினையும் மாணவர்களிடையே உருவாக்கி விடுவதோடு அவர்களுக்கும் பொறுப்புக்களை நிர்வகிக்கும் ஆற்றலை வழங்குகிறது.
தேசிய கொடியை மதிக்கும் நல்லெண்ணம் தொடர்பான அறிவினை மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் முதல் நிகழ்வாக பாடசாலை நிகழ்வுகளே அமைந்து விடுகின்றன.
அத்தகைய சூழலில் பொதுவான வழக்கத்திலிருந்து மாறிய பழக்கமாக தேசிய கொடிக்கு நிகராக சமமான உயரங்களில் ஏனைய கொடிகளை பறக்கவிடுவதானது மாணவரிடையே அது தொடர்பான பண்பினை கற்றுக்கொடுக்க தவறிவிடும் என சமூக நலன் மீது அக்கறையுடன் செயற்பட்டுவரும் சமூக சேவையாளர் சிலரிடம் இந்நிகழ்வின் தாக்கம் எப்படியிருக்கும் என கேட்ட போது குறிப்பிட்டனர்.
பாடசாலைச் சின்னங்களை மதிக்கும் நற்பண்பினை வளர்த்தால் நாட்டின் சின்னங்களை மதிக்க கற்றுக் கொடுக்கலாம்.அவ்வாறு கற்று வரும் மாணவர்களைத தான் இந்த நாட்டின் நற்பிரயைகள் என போற்ற முற்படுவார்கள் என்பது திண்ணம்.
கவனமெடுக்குமா முல்லைக் கல்வி வலயம்
முல்லைத்தீவு கல்வி வலயத்தின் அதிகமான பாடசாலை இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய கொடிக்கு நிகராக பாடசாலைக் கொடி உட்பட ஏனைய கொடிகளை ஏற்றியது தொடர்பில் ஏற்பட்டிருந்த தவறினை இனிவரும் காலங்களில் சீர்செய்துகொள்ள முல்லைத்தீவு கல்வி வலயம் பொறுப்புணர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொடிக்கு மதிப்பளிக்கும் பண்பாட்டினை மாணவர்களுக்கு பழக்கப்படுத்தினால் தான் அவர்களிடையே தேசப்பற்று மேலோங்கி வளரும் எனவும் அந்த இயல்பு நாட்டில் அக்கறையுள்ள பிரயைகளாக அவர்கள் வளர உதவும்.இதனால் சட்டத்துக்கு முரனான குற்றங்கள் குறைந்து செல்லவும் உதவும் என்பது புரிந்தது கொள்ளப்பட வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |