சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆட்டினை ஏற்றிச்சென்ற ஐவர் கைது
முல்லைத்தீவு – நெடுங்கேணி வீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (24.05.2026) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லைத்தீவு – நெடுங்கேணி வீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் ஐவர் அவர்களது வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் ஹெப் ரக வாகனத்தில் ஒரு மாட்டையும், நீராவிப்பிட்டி, முள்ளியவளை பகுதியியை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவர் ஹெப் ரக வாகனத்தில் நான்கு மாடுகளையும், கள்ளப்பாடு தெற்கு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் இரண்டு மாடுகளையும், இதேநேரம் மாமூலை – முள்ளியவளை பகுதியை சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடைய இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஆடு ஒன்றை கொண்டு சென்ற நிலையில், மிருகவதை சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் தகவலுக்கமைய, முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரட்ணவீர எல். அடசூரியவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், முல்லைத்தீவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam