கடற்றொழிலாளர்களின் எரிபொருள் மானியங்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவதை போன்று கடற்றொழிலாளர்களுக்கும் எரிபொருள் மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், "2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு பற்றிய எனது கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள்களை இந்த மேலான அவையில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
2025ஆம் ஆண்டு பாதீடு
நான் பிரதிநிதித்துவபடுத்தும் திருகோணமலை மாவட்டமானது 141 கி.மீ நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் அமைந்துள்ள கிழக்கு மாகாணம் ஆனது 431 கி.மீ நீளமுள்ள கடற்கரையை கொண்டதாகும்.
கிழக்கில் கடற்றொழில் தொழிலும் அது சார்ந்த பொருளாதாரமும் மிக முதன்மையான ஒன்றாகும். திருகோணமலையில் 23,975 கடற்றொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் உள்ளன. கிழக்கு மாகணத்தில் 67,355 கடற்றொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் உள்ளன.
இந்த அரசால் முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கு 6,213 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுக்காகவும் 5,227 மில்லியன் ரூபா மூலதன செலவுக்காகவும் மொத்தமாக 11,440 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 428 மில்லியன் ரூபா கூடுதலானது ஆகும். இது வரவேற்கதக்க விடயமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |