வெறிச்சோடிய வீதிகள்! யாழில் விஸ்தரிக்கும் போராட்டம்! - பொலிஸார் குவிப்பு (Photo)
புதிய இணைப்பு
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வலைகளே இவ்வாறு அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.
அதனை கண்டித்து மீனவர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் படகுகளை , வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அவ் வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் வீதியை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மீனவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றன. மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தோம். பல கட்டங்களாக போராட்டங்களை முன்னெடுத்தோம்.
இது எதற்குமே பயனில்லை. மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. அவர்களை கட்டுப்படுத்தவோ அவர்களை தடுத்து நிறுத்தவோ எவரும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை.
அத்துமீறி எமது எல்லைக்குள் நுழையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டியடிக்க எம்மால் முடியும். ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்திலையே நாம் பொறுமை காக்கிறோம்.
அத்துமீறும் மீனவர்களை , அவர்களின் படகுகளுடன் சிறைப்பிடித்து எமது கரைக்கு கொண்டு வரவும் எம்மால் முடியும். எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதேவேளை , எமது பிரச்சனைகள் தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளாவிடின் நாம் சீனாவின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
கடற்தொழில் அமைச்சர் இது தொடர்பில், நடவடிக்கை எடுக்க முடியாவிடின் அவர் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது எனவும் மீனவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் வீதியை மறித்து மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அனைத்து வீதிகளையும் மறித்து போராட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பருத்தித்துறை வீதிகளும் மூடப்பட்டுள்ள நிலையில் வெறிச்சோடி காணப்படுகின்றன.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பகுதியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக தமது தொழில் மற்றும் வளங்கள் சூறையாடப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்ததையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும, பந்தல் அமைத்து தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க மீனவர்கள் முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரை மாற்றுமாறும், அத்துமீறும் மீனவர்களை கைதுசெய்யுமாறும் மீனவர்கள் கோசம் எழுப்பி வருகின்றனர்.










