மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு உடந்தையாக இருக்கும் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று(16.10.2026) கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
போராட்டத்தில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், மாதர் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டனர்.
மனு கையளிப்பு
இதன் போது தடை செய் தடை செய் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய், அழிக்காதே அழிக்காதே மட்டக்களப்பு கடல்வளத்தை அழிக்காதே, சுருக்கு வலைக்கு உடந்தையாக இருக்கின்ற உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய், வேண்டும் வேண்டும் இலஞ்சம் பெறாதா நேர்மையான உத்தியோகத்தர் மட்டக்களப்புக்கு, தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை உடனடியாக தடை செய், வெளிமாவட்ட சட்டவிரோத சுருக்குவலை தொழிலாளர்களை அனுமதிக்காதே, ஏழை கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள பணிப்பாளரிடம் மனு ஒன்றை கையளித்த பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.