ராஜபக்ச தரப்பின் இறுதித் துருப்புச் சீட்டு இனவாதமா..! மக்கள் சக்தி முன்வைத்த குற்றச்சாட்டு
உலப்பனே சுமங்கல தேரர், கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட சில பிக்குகள் அடங்கிய குழுவினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியலில் செல்வாக்குச் செலுத்த முயற்சிகின்றனர் என்று தேசிய மக்கள் சக்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச குடும்பத்தினர்
"ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான ஊழல், மோசடிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், இனவாதத்தைத் தூண்டும் பிக்குகள் குழுவொன்று மீண்டும் அரசியல் அரங்கில் தலைதூக்கியுள்ளது.

இந்தக் குழுவினரின் கடந்தகாலச் செயற்பாடுகளை மக்கள் நன்கு அறிவார்கள். கஸ்ஸப்ப தேரர் என அழைக்கப்படுபவரும் நச்சுத்தனமான இனவாதத்தைப் பரப்பும் வகையில் செயற்படுகின்றார்.
திருகோணமலையில் புத்தர் சிலை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையைப் பயன்படுத்தி, இனவாத அடிப்படையில் பதற்றத்தை உருவாக்கி, சட்டவிரோதமான முறையில் நிலத்தைக் கைப்பற்றி அங்கு கட்டடம் அமைக்க முயற்சிக்கப்பட்டதை மக்கள் மறந்துவிடவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் மதங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன.
கலகொட அத்தே ஞானசார தேரர்
கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், அவருக்கு ஆதரவாக உலப்பனே சுமங்கல தேரர், கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட அதே குழுவைச் சேர்ந்த பிக்குகள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர்.
சமந்தபத்ர தேரர் போன்றவர்களும் பௌத்த மதத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். பௌத்த துறவிகளாக இருப்பவர்கள் மதத்தின் அடிப்படைப் போதனைகளையும் ஒழுக்கத்தையும் பேண வேண்டும்.

மாறாக, சிலர் பிரபலமடைவதையும் அரசியல் செல்வாக்கைப் பெறுவதையும் முன்னிலைப்படுத்துகின்றனர். கலகொட அத்தே ஞானசார தேரர் மாளிகாவத்தைப் பகுதியை 'காசா'வாக மாற்றினால், தாம் 'இஸ்ரேலாக' இருக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
காசா மீது தாக்குதல் நடத்தப்படுவதையும், அங்குள்ள சிறுவர்கள் கொல்லப்படுவதையும் ஆதரிக்கும் வகையிலான கருத்தாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
இறுதித் துருப்புச் சீட்டு
ஞானசார தேரர் போன்றவர்கள் சிங்கள பௌத்த இனவாதத்தைத் தூண்டியபோது, மறுபுறத்தில் சஹ்ரான் போன்ற தீவிரவாதிகள் உருவாகும் சூழலும் காணப்பட்டது.
இவ்விரு தரப்புகளின் பின்னணியிலும் அரசியல் சக்திகள் இருந்தனவா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.
ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அரசியல் சக்திகள், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழியாக இனவாதத்தைத் தூண்டுவதையே தமது இறுதித் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றனர்.

பௌத்த மதத்தின் பெயரைப் பயன்படுத்தி, அதன் அடிப்படை விழுமியங்களை அழித்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி புத்தர் சிலையை முன்னிறுத்துவது முரண்பாடானது.
பௌத்த மதத்தைப் பாதுகாக்க விரும்பும் மக்கள் இத்தகைய செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். இந்த நாட்டுக்கு மீண்டும் இனவாத மோதல்களும் போரும் பயங்கரவாதமும் தேவையில்லை.
இந்தப் பிக்குகள் குழுவினரின் பேச்சுகளிலும் நடத்தைகளிலும் காணப்படும் வன்முறைப் போக்குகள் குறித்து மக்கள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். பௌத்த மதத்தைப் பாதுகாப்பது என்பது இனவாதத்தைப் பாதுகாப்பதல்ல. மதத்தின் பெயரால் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.