மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான கருத்திற்கு எதிராக கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பாஸ் அனுமதி மூலம் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பான அமைச்சர் டக்ளஸின் கருத்திற்கு எதிரான கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலி தென்மேற்கு பிரதேச சபையில் நேற்றைய தினம் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பிரேரணையை முன்வைப்பதற்குச் சபையில் அனுமதி கோரப்பட்டபோது ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர்கள் இதனை எதிர்த்துள்ளனர்.
இதனால் சபையில் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தவிசாளரினால் சபையானது 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் கூட்டமானது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கண்டனப் பிரேரணையானது 12 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதை தொடர்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்த பிரேரணை அறிக்கையை அமைச்சருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த பிரேரணை அறிக்கையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவலால் பெருமளவான சொத்திழப்பையும், வருமான இழப்பினையும் எமது மீனவர்கள் யுத்த காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் சந்தித்துள்ளார்கள்.
ஆனால் தற்போது எமது மீனவர்கள் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக்கொண்டு வரும்போது தங்களது கருத்தானது பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறிய கட்டணத்துடன் இந்திய மீனவர்களை எமது கடல் எல்லைக்குள் அனுமதிப்பது என்பது எமது கடல் வளத்தினை நாமே அழிப்பதற்கு ஒப்பானது என்பதுடன், எதிர்காலத்தில் கச்சதீவினைக் காப்பாற்ற முடியாமலும் போகலாம்.
எமது மீனவர்களின் மீன்பிடி ஆற்றலும் மீன்பிடி துறையின் வளர்ச்சியும் கடல் உணவுகளின் ஏற்றுமதியும் தங்களது இத்திட்டம் செயல் வடிவம் பெறும் போது படிப்படியாகக் குறைவடையச் செய்வதோடு மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் எமது நாட்டு இளைஞர்கள் முன்வருவதும் குறைவாகவே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri