மின்சாரம் தாக்கி கடற்றொழிலாளர் பரிதாப பலி(Photos)
மட்டக்களப்பு- ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் கடற்றொழிலாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம்(26.06.2023) வழமைபோல் மீன் பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாததினால் அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டபோது அவர் இறால் பண்ணைக்கு அருகாமையிலுள்ள நீரோடையில் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (27.06.2023) மீட்கப்பட்டுள்ளார்.
கவத்தமுனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணையின் பாதுகாப்பு கருதி வேலிகளுக்கு மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது.
பண்ணை உரிமையாளருக்கு எதிர்ப்பு
குறித்த மின்சார இணைப்பானது இறால் பண்ணைக்கு அப்பாலுள்ள நீரோடைக்கு குறுக்காவும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தெரியாத குறித்த நபர் மின்சார இணைப்பில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இறால் பண்ணை உரிமையாளர் மேற்கொண்ட மின் இணைப்பிற்கு எதிராக அங்கிருந்தவர்கள் விசனம் தெரிவித்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இறால் பண்ணை தவிர்ந்த பொதுமக்கள் பாவிக்கும் பொது இடங்களில் மின்சாரம் வழங்குவதை தடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த காலத்தில் குறித்த இடத்தில் மின்சாரம் தாக்கி யானை ஒன்றும் 3 கால் நடைகளும் இறந்துள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |