கடலட்டை, கடற்தாவர பண்ணைகளுக்கு பங்கம் ஏற்படும் வகையில் மீன்பிடி அமைச்சர் செயற்படுவதாக குற்றச்சாட்டு
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் வருவாயைத்தரக்கூடிய வாழ்வாதார தொழில்களான கடலட்டை மற்றும் கடற்தாவர பண்ணைகளுக்கு பங்கம் ஏற்படும் வகையில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் குற்றம்சாட்டியுள்ளார்.
பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வலைப்பாடு பகுதியில் வசிக்கும் கடலட்டை மற்றும் கடற்தாவர பண்ணைகளை நடத்தும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கள விஜயம் ஒன்றினை நேற்று மேற்கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வலைப்பாடு கிராமத்திற்கு அருகில் இருக்கும் எருமை தீவு பகுதியில் கடற்தாவர மற்றும் கடலட்டை பண்ணை வளர்ப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு இடையூறாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அத்துமீறி மீன்பிடியைப் புகுத்தி தனக்கு இசைவானவர்களுக்கு அந்த வாழ்வாதாரத்தை வழங்கும் வகையில் டக்ளஸ் தேவானந்தா மேற்கொள்கின்ற செயற்பாடு தொடர்பாக மீனவர்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
அது மட்டும் இன்றி குறித்த மீனவர்கள் இலங்கை அரசின் உடைய 2010 ஆண்டு வர்த்தகமானியின் அறிவித்தலின் பிரகாரத்தின் படியே பாசி கடற் தாவரங்கள் வளருகின்றன.
இடமாகக் குறிக்கப்பட்ட இந்த இடத்தில் கம்பி வலை பாய்த்து மீன்பிடியில் ஈடுபடக்கூடாது என வரையறுக்கப்பட்ட இடத்தில் அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு அமைவாக 100 மேற்பட்ட அட்டை பணியாளர்களையும் அட்டை பண்ணைகளையும் 40க்கு மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாசி பண்ணைகளையும் நடாத்தி வருகின்றனர்.
இவர்களது தொழிலிற்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் வாழ்வாதாரத்தை அழிக்கும்
வகையிலும் மீன்பிடி துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய சுயநலத்திற்காக
இந்த மக்களை அடகு வைக்க முனைகிறார் எனக் குற்றம் சாட்டினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.




