அதிகாரிகளின் அனுசரனையுடன் சுருக்கு வலை பாவனை - அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
வடக்கு கடலில் எவ்வாறு இந்திய இழுவை படகினால் கடல் மீன் வளங்கள் அழிக்கப்பட்டதோ அதேபோல கிழக்கில் மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் கடற்றொழில் திணைக்கள சில அதிகாரிகளின் அனுசரனையுடன் சுருக்கு வலை பாவித்து நாளுக்கு நாள் மீன்வளம் அழிக்கப்பட்டு வருகிறது என மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதனால் கடற்தொழிலாளர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (10.11.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை
மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடி இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக கடற்றொழில் திணைக்கள பணிப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து கடந்த மாதம் சட்டவிரோத சுருக்கு வலை தடை செய்ய கோரி திணைக்களத்துக்கு முன்னாள் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பணிப்பாளருக்கு மனு ஒன்றை வழங்கினோம். எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில் சிறிய அதிகாரம் கொண்ட எங்கள் அமைப்பு கடற்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் 14 சுருக்கு வலைகளை பிடித்து கொடுத்தோம். இருந்தபோதும் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் தொலைபேசி ஊடாக எங்கள் அமைப்பு தொடர்பு கொண்டு செட்டிபாளையத்தில் ஒரு வீட்டில் சட்டவிரோத சுருக்குவலை மறைத்து வைத்திருப்பதாக எங்களுக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் அதை பிடிப்பதற்கு கடற்றொழில் திணைக்கள இரு உத்தியோகத்தர்களை தருமாறு கோரினோம்.
கிடைத்த தகவல்
அதற்கு பணிப்பாளர் சனி, ஞாயிறு கிழமைகளில் உத்தியோகத்தர்களை தர முடியாது. பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையை கூட்டிச் சென்று பிடிக்குமாறு பதிலளித்ததுடன் அது எங்கு இருக்கிறது என வினவினார். அதை நாங்கள் கூறவில்லை. ஆனால் அவர் சட்டவிரோத சுருக்கு இருக்கும் இடத்தை கேட்டறிந்து அவர்களுக்கு தகவல் வழங்குவதற்காகவே தான் அவர் இடத்தை கேட்டுள்ளார்.
இவ்வாறு கடற்றொழில் திணைக்களம் செய்ய வேண்டியதை பொலிஸார் செய்ய வேண்டுமா? கடலில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க வேண்டியது கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினர் இந்த இரு பகுதியினர் தான் என குறிப்பிட்டுள்ளார்.