கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று மாணவி சாதனை
வெளியாகிய க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் முல்/பாலிநகர் மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் கல்வி பயின்ற சிவகுமாரன் மதுரா மாவட்ட ரீதியில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் இவர் யூடோ போட்டியில் மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் கலந்து கொண்டுள்ளதுடன், வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தனியாகவும், குழுவாகவும் பங்குபற்றி பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
தனது வெற்றி தொடர்பான அனுபவத்தை அவர் பகிர்கையில்,
எனது குடும்பம் வறுமையானது. எனது தந்தை சாரதியாக பணிபுரிகின்றார். என்னையும் தம்பியையும் கல்வி கற்க வைப்பதற்கு அன்றாடம் அம்மா,அப்பா படும் கஷ்டங்களை எனது கண்களினூடாக பார்த்துள்ளேன். என்னைக் கல்வி கற்க வைப்பதற்கு எனது பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுகின்றனர்.
ஆதலால் அவர்களுக்கு நான் கௌரவத்தினைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். அதற்கான பலனையும் தற்போது பெற்றுள்ளேன். நான் இன்று இந்த நிலைக்கு வருவதற்கு வழிகாட்டியாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்தார்.

