அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்தவர் பொலிஸில் ஒப்படைப்பு!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் இன்று(31.8.2026) பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வயல்வெளிகள் மற்றும் கால்நடைகளின் மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் புற்றரைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாகி வருவதுடன், புகை மற்றும் தீ பரவல் காரணமாக வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
மேலதிக விசாரணை
புற்றரைகளுக்கு தீவைக்கும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை இதுவரை அடையாளம் காணவோ அல்லது கைது செய்யவோ முடியாத நிலை காணப்பட்டதால், வேலணை பிரதேச சபையும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று குறித்த பகுதியில் ஒருவர் தீவைத்துக் கொண்டிருந்தபோது அவர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த நபர் மனநலப் பாதிப்புக்குள்ளானவர் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் முடிவுக்கு வரும் அநுரவின் ஆட்சி! உறுதியாகக் கூறும் முக்கியப் பிரமுகர்..
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15