கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்
புதிய இணைப்பு
ஹோமாகம, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையின் மூன்று மாடி கட்டடம் முழுவதும் தீ பரவிய நிலையில், நீண்ட நேர தேடுதல் நடவடிக்கைகளின் போது தீக்காயங்களுடன் ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அடையாளம் காண முடியாத தீக்காயங்கள்
மேலும், அவர்களில் மூன்று பேர் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீக்காயங்களுக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்.

தீ வேகமாக பரவியதால், மக்கள் சிக்கியிருந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்றடைவது கடினமாக இருந்ததாகவும் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்காக 6 தீயணைப்புத்துறைகள் வந்திருந்த நிலையில், தீ தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தீ விபத்தில் காயமடைந்த ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன
மூன்றாம் இணைப்பு
ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைப்பதற்காக, கோட்டே மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தொழிற்சாலையிலிருந்து 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் இளம் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 இற்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தீ பரவிய நேரத்தில் ஒரு குழுவினர் காப்பாற்றப்பட்ட நிலையில், மேலும் சிலர் பின்புற வாயில் வழியாக வெளியேறியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
தீ விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த பல மணி நேரமாக தீயணைப்பு பிரிவினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு
ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (21) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு பிரிவினர் அழைப்பு
இந்த தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ தொடர்ந்து பரவி வருவதாகவும், தீயை அணைக்க கோட்டை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிகுறிகள் தென்படுமாயின் வீட்டிலேயே இருக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை