மூக்கு கண்ணாடி நிலையத்தில் தீ விபத்து : முற்றாக எரிந்து நாசமான பொருட்கள்
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எதிரில் அமைந்திருந்த தனியார் மூக்கு கண்ணாடி நிலையம் ஒன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக எரிந்து சாம்பலானது.
குறித்த சம்பவம் நேற்று(06.11.2025) பதிவாகியுள்ளது.
இரு தளங்களுக்கும் பலத்த சேதம்
இந்த நிலையம் இரண்டு மாடிகளை கொண்டது. தரைத்தளத்தில் (Ground floor) முதலில் தீ ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் முதல் தளத்திற்கும் இரண்டாவது தளத்திற்கும் தீ பரவியதாகவும் தெரிய வருகின்றது.

முதலாவது தளத்தில் அமைந்திருந்த காட்சியறை முழுமையாக சாம்பலாகி இருப்பதாகவும், களஞ்சியசாலைகளாக பயன்படுத்தப்பட்டு வந்த, ஏனைய இரு தளங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக, கடை உரிமையாளர் மின் பிறப்பாகியை செயல்படுத்த முனைந்த வேளையில், அதிலிருந்து வெளியான, பெட்ரோலிய கசிவு அருகில் இருந்த குளிரூட்டிகளை பற்றிய போதே தீ பரவியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பற்றியதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாகச் செயற்பட்டு தீயணைப்புப் பிரிவினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய
திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இருப்பினும், தீயின் வேகம் காரணமாக, நிலையத்தின் உள்ளே இருந்த பல இலட்சம் பெறுமதியான மூக்குக் கண்ணாடிகள், லென்சுகள், பார்வைச் சோதனை உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சேதமாகியுள்ளன.

தீ விபத்தின் போது கட்டடத்தில், உள்ளே இருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதனால், எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சேத மதிப்பீடு மற்றும் தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய இலங்கை மின்சார சபை அதிகாரிகளும் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |