திலினி பிரியமாலியின் மற்றுமொரு மோசடி அம்பலம் - பெருமளவு தங்கத்தை பறிகொடுத்த தொழிலதிபர்
இலங்கையில் பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் திலினி பிரியமாலி, தனது கணவர் என கூறிக்கொள்ளும் நபருடன் இணைந்து தங்க மோசடியிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இலங்கைக்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதாக கூறி தொழிலதிபர் ஒருவரிடம் தங்கத்தை பறித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் கொண்டுவர கேட்கப்பட்ட பணம்
இந்த வர்த்தகர் திலினி பிரியாமாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முதலாவதாக முறைப்பாடு செய்திருந்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திலினியின் கணவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் குறித்த வர்த்தகரை சந்தித்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதாக கூறி பணம் கேட்டுள்ளார்.
முதல் பரிவர்த்தனை மூலம் நம்பிக்கையை பெற்ற திலினியும் அவரது கணவரும் மீண்டும் அதிக பணத்தை முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சொந்தமான 136 பவுண் தங்கம் திலினி உள்ளிட்டோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்க மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு
ஆனால், அந்த தொழிலதிபரின் மேலாளர், தங்க ஆபரணங்களை வழங்கியதை ரகசியமாக பதிவு செய்துள்ளார். இது குறித்த காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பத்து கோடிக்கு மேல் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் தங்கத்தை எடுத்துச் சென்ற பிறகு, தொடர்ந்து அவரைத் தவிர்த்து வந்ததாக தொழிலதிபர் கூறுகிறார்.
அதன் பின்னர் இந்த வர்த்தகர் தனக்கு நடந்த நிதி மற்றும் தங்க மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி கடந்த 6ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திலினி பிரியமாலி எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.