நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி! பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வசும பிரிவுக்குப் பொறுப்பாக செயற்பட்ட ஹட்டன் - டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணொருவரும், ஹட்டன்-டிக்கோயா காபெக்ஸ் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்
சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையான சட்டத்தரணிகள், சந்தேகநபர்களில் ஒருவர் கர்ப்பிணி தாயெனவும், அவரது சுகாதார நிலையைக் கருத்திற்கொண்டு எந்தவொரு பிணை நிபந்தனையின் அடிப்படையிலும் இருவரையும் பிணையில் விடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

முறைப்பாட்டாளர் சார்பில் நீதிமன்றத்தில் கருத்துகளை முன்வைத்த, ஹட்டன் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், “மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் மோசடி செய்யப்பட்ட தொகை தற்போது 250 இலட்சம் ரூபாயைக் (2.5 கோடி) கடந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டனர்.
அத்துடன், இந்த நிதி மோசடி தொடர்பில் நோர்வுட் பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தணிக்கை நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையாததால், சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரதேச செயலக அதிகாரிகள் வழங்கிய உறுதி
இருதரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும் மீண்டும் செப்டம்பர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனிடையே, நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும கணக்கில் பணம் வைப்பிலிடப்படாத பயனாளிகள் நேற்று (24) நோர்வுட் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தமது கணக்குகளைப் பரிசோதிப்பதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.
இதன்போது, அஸ்வெசும பயனாளிகளின் பெயர் பட்டியல் விரைவில் தமது அலுவலகத்திலும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதேச செயலக அதிகாரிகள் பயனாளிகளிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.