இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி: மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளுக்கு செல்லும் வைத்தியர்கள்
இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் மருத்துவர்கள் மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு அதிக வாய்ப்புகளுடன் இடம்பெயர்ந்து வருவதாக செய்தி தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
85 சதவீத மருந்துத் தேவைகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை நம்பியிருக்கும் நாட்டில் உள்ள மருத்துவ வல்லுநர்கள், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் போதுமான சிகிச்சையை வழங்குவதில் சிரமப்படுவதாகக் கூறி, பல மாதங்களாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேலை நிலைமைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான சிறிய நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நூற்றுக்கணக்கானவர்கள் நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள்
2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரச மருத்துவ நிறுவனங்களிலிருந்து குறைந்தது 500 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவ கலாநிதி ருவைஸ் ஹனிபா தெரிவித்துள்ளார்.
தனியார் துறையில் பணிபுரியும் குறைந்தது 100 மருத்துவர்களும் வெளியேறியுள்ளனர், அதே நேரத்தில் பயிற்சிக்காகச் சென்று திரும்பாதவர்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை.
சிறுநீரக மாற்று சிகிச்சை
அரசாங்க செலவில் வெளிநாட்டு பயிற்சிக்காக அரசாங்கம் அனுப்பிய மருத்துவர்களின் துல்லியமான மதிப்பீடு தங்களிடம் இல்லை, எனினும் அவர்களும் எதிர்காலத்தில் நாட்டுக்கு திரும்ப கூடாது என்று முடிவு செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் இன்னும் துல்லியமாக இல்லாவிட்டாலும், சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர்களில் 25 சதவீதத்தை இலங்கை ஏற்கனவே இழந்துவிட்டது என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள 40 சிறுநீரக மருத்துவர்களில் 10 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று இலங்கையின் முக்கிய சிறுநீரக மாற்று சிகிச்சை மையமான கொழும்பில் உள்ள வெஸ்டர்ன் மருத்துவமனையின் பொது மேலாளர் ஓமர் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலோர் வருமானம் கருதி இங்கிலாந்துக்குச் செல்கிறார்கள் இதேவேளை இலங்கையில் கடமையாற்றும் மருத்துவர்களும் தங்கள் கடமைகளைச் செய்வதற்கு மருத்துவப்பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில், கைகள் கட்டப்பட்டிருக்கும் சூழ்நிலையில் உணர்கின்றனர்.
இதனால் மருத்துவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று
மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு சிகிச்சையளிக்க முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது, என்று மருத்துவர் கூறினார். 'இது ஒரு வருந்தத்தக்க நிலை.'