விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு: மக்கள் திரண்டு வந்து பங்கேற்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இறுதி நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
மக்கள் திரண்டு வந்து ஏற்பாடுகளில் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.
இளைஞர்
யுவதிகளின் பங்களிப்பு பாராட்டும் படியாக இருக்கின்றது என ஏற்பாட்டுக்குழு
சார்பாக பேசவல்லவர் குறிப்பிட்டார்.
இளையவர்கள் ஆர்வமிகுதியோடு துயிலுமில்லத்தின் பரப்பெங்கும் பறந்து செல்வதை அவதானிக்கும் போது ஆனந்தம் ஊற்றெடுப்பதாக மாவீரர்களின் பெற்றோர்கள் எடுத்துரைக்கின்றனர்.
கார்த்திகை 27 இறுதி நாள் ஏற்பாடுகள்
மாவீரர் நாளான கார்த்திகை 27 இன்று மாலையில் விளக்கேற்றி மாவீரர்களை அஞ்சலிப்பதற்கான ஏற்பாடுகளில் கடந்த ஒரு மாத காலமாக ஈடுபட்டு வருவதாகவும் இன்றோடு எல்லா பணிகளையும் செய்து முடித்து விட்டதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
விளக்கேற்றுவதற்கான தீபங்கள் தயார்படுத்தப்பட்டு நிரல்படுத்தப்பட்டு நடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீபத்தோடும் தென்னம் பிள்ளை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மாவீரர் சார்பாக மாவீரர் பெற்றோருக்கு வழங்கப்படுவதற்காக அது பயன்படும் எனவும் குறிப்பிட்டார்.
மாவீரர் துயிலும் இல்லத்தினை எல்லைப்படுத்தி சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகளை கட்டி அலங்கரித்ததோடு துயிலுமில்லத்தின் உள்ளேயும் தொகுதிகளாக பிரித்து சிவப்பு, மஞ்சள் கொடிகளால் ஒழுங்கமைத்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
மூவின மக்களையும் அழைக்கின்றோம்
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் இறுதி நாள் நிகழ்வுகளுக்கான பணிகளை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டுக்குழுவினர் இலங்கையில் வாழும் மூவின மக்களையும் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர்.
தாயகக் கனவோடு தமிழீழ தாயகத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை தாம் எப்படியெல்லாம் அஞ்சலித்துப் போற்றுகின்றோம் என்பதை வந்து பார்க்க கேட்டு நிற்கின்றனர்.
விடுதலை வேள்வியில் ஆகுதியான மாவீரர்களின் உறவினர்களையும் அவர்களின் உணர்வுகளையும் வலிமிகுந்த மன வேதனைகளையும் நேரில் வந்து பார்க்கும் போது தான் எங்கள் செயற்பாடுகள் மீதான நியாயப்பாடுகளை உணர முடியும்.
மாவீரர் நிகழ்வுகளை தடுப்பதோ அன்றி அதனை அவதூறாக விமர்சிப்பதோ அந்த நிகழ்வுகளின் உணர்ச்சி மிகு வலியை அறியாதது தான் காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போரில் வீரச்சாவடைந்த ஒருவரை உணர்வெழுச்சியோடு தாம் அஞ்சலித்து போற்றுவதனை தங்கள் பண்பாடாக கடைமையாக கருதுவதாகவும் இதுவே நாளை ஈழத்தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களில் ஒன்றாகி விடும் என்றும் மன உறுதியோடு அவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமையும் நோக்கத்தக்கது.
துயிலுமில்லக் காணியை விடுவிக்க வேண்டும்
மட்டு, அம்பாறை போராளிகளின் துயிலுமில்லமாக விளங்கியது விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்.
மட்டு அம்பாறை மாவட்டங்களில் இருந்து வடக்குப் போர் முனைக்கு நகர்த்தப்பட்ட போராளிகள் வீரச்சாவடையும் போது அவர்களது வித்துடல்களை மட்டு, அம்பாறை மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால் அவற்றை தேராவில் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டதாக முன்னாள் போராளியொருவர் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஒன்பதாயிரம் வரையான மாவீரர்கள் துயிலும் இடமாக தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்லறைகளை கொண்ட துயிலுமில்லத்தின் பகுதி இப்போது சிங்கள இராணுவத்தினர் வசம் இருக்கின்றது.
அதனை விடுவிக்குமாறு தாம் கேட்டுக்கொண்டிருப்பதோடு அந்த நிலத்தினை மீட்டெடுத்திட பல போராட்டங்களையும் நடத்தியவாறு தாம் இருக்கும் இவ்வேளையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த தடை கேட்டு நீதிமன்றத்தினை இலங்கை பொலிஸார் நாடியிருந்தனர் என்பது கவலையளிக்கும் விடயமாகும்.
துயிலுமில்லக் காணியை விடுவிக்கும் வரை அதற்கான போராட்டத்தினை நடத்தியவாறே இருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிவப்பு, மஞ்சள் கொடிகளை துயிலுமில்லத்தின் எல்லைகளாக உள்ள இடங்கள் வரை கட்டி அடையாளப்படுத்தியிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.
துயிலுமில்லக் காணிக்கு அருகிலுள்ள இடமொன்றில் 2023ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் நோக்கத்தக்கது.




