இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் மின்சார கட்டண குறைப்பு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 20 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் இன்று(17) இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, இன்று(17.01.2025) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, வீட்டுப்பாவனையின் போதான, 0 – 30 அலகுகளுக்கு 29 வீதமும், 31 – 60 அலகுகளுக்கு 28 வீதமும், 61 – 90 அலகுகளுக்கு 19 வீதமும், 91 – 180 அலகுகளுக்கு 18 வீதமும், 180 அலகுகளுக்கு மேல் 19 வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொதுத் தேவை கருதிய மின் பாவனையாளர்களுக்கு 12 வீதமும், அரச நிறுவனங்களுக்கு 11 வீதமும், ஹோட்டல் துறைக்கு 31 வீதமும், வழிபாட்டுத்தலங்களுக்கு 21 வீதமும், தொழிற்துறைக்கு 30 வீதமும், வீதி விளக்குகளுக்கு 11 வீதமும் மொத்த விலைக் குறைப்பு 20 வீதம் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறை திருத்தமின்றி தற்போதைய அளவிலேயே மின்கட்டணத்தைப் பேணுவதற்கு இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் கோரியுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதித் தீர்மானத்தை இன்று அறிவிக்கவுள்ளது.
மின்சாரக் கட்டணம்
அரசாங்கத்தின் நிலைப்பாட்டின்படி, ஆறு மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்க முடியாது என்று இலங்கை மின்சார சபை சமீபத்தில் அறிவித்தது.
ஆனால் மின்சார உற்பத்திச் செலவைக் குறைத்து, அதன் மூலம் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் தொடர்ந்து வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |