ஜப்பானின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள பிமியோ கிஷிடா
ஜப்பானிய ஆளும் கட்சியின் தலைவர் பதவிக்காக கட்சிக்குள் இன்று நடந்த வாக்கெடுப்பில் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பிமியோ கிஷிடா (Bimeo Kishida) வெற்றிப்பெற்றுள்ளார்.
ஜப்பானிய ஆளும் கட்சியின் தலைவரே அந்நாட்டின் பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவார்.
இதனடிப்படையில், ஜப்பானின் புதிய பிரதமராக பிமியோ கிஷிடா தெரிவு செய்யப்படவுள்ளார்.
ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக்குள் நடந்த தலைவர் பதவிக்கான போட்டியில் கிஷிடா 257 வாக்குகளை பெற்றார். ஆளும் கட்சியின் தலைவர் பதவிக்கு கிஷிடா தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், லிபரல் ஜனநாயக கட்சியின் தற்போதைய தலைவரும், பிரதமருமான யோஷித்தோ சூகா பதவியில் இருந்து விலகவுள்ளார்.
கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவரை தெரிவு செய்ய தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்ட போது, தான் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என சூகா அறிவித்திருந்தார்.
கோவிட் 19 தொற்று நோய்க்கு மத்தியில் பிரதமர் பதவியை வகிப்பது உடல் ரீதியாக மாத்திரமல்லாது, மன ரீதியாகவும் தனக்கு பெரும் சவால் எனவும் இதனால், கட்சியின் தலைவர் பதவியையும் பிரதமர் பதவியை கைவிடுவதாகவும் சூகா குறிப்பிட்டுள்ளார்.
சூகா, பிரதமர் பதவி மற்றும் கட்சியின் தலைவர் பதவியையும் ஓராண்டு காலம் மாத்திரமே வகித்துள்ளார்.