இளைஞரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி பணி நீக்கம்
குருநாகல், யக்கஹபிட்டிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த அதிகாரி அனைத்துப் பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவதானித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியின் தலைமையில் ஐவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொலை மிரட்டல்
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை பலரும் பகிர்ந்தனர்.
எரிபொருள் கேட்ட நபரை எட்டி உதைத்த குறித்த இராணுவ அதிகாரி ஏற்கனவே குற்றச்சாட்டில் சிக்கியவர் என தெரியவந்துள்ளது.
இதனிடையே, எரிபொருள் வரிசையில் நின்றிருந்த இளைஞரை இராணுவ அதிகாரி உதைத்த காட்சிகளை பதிவு செய்த இளைஞனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக காணொளியை பதிவு செய்த இளைஞர் இணைய ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.