மத நல்லிணக்கத்தினை நோக்காக கொண்டு அனைத்து மத ஸ்தலங்களுக்குமான களவிஜய செயற்றிட்டம்
இளைஞர் யுவதிகளின் திறன்களை அடையாளப்படுத்தி அவர்களை வலுவூட்டுவதன் ஊடாக சவால்மிகுந்த எதிர்காலத்தை வெற்றிகொள்வதற்கும் இலங்கையில் உள்ள நான்கு மதங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு இடையில் இன நல்லுறவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதன் ஊடாக இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் நோக்கத்தினையும் அடிப்படையாக கொண்டு GAFSO அமைப்பினால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
GAFSO அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் A.J.காமில் இம்டாட்டின் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டில் கடந்த 23.11.2025ம் திகதி முதலாவது கட்டமாக கொக்கட்டிசோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் சிவன் ஆலயத்திற்கு அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு இனங்களையும் சேர்ந்த சுமார் 50 இளைஞர், யுவதிகள் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
விசேட அம்சம்
இக்களவிஜயத்தின் போது ஆலய பரிபாலன சபையின் செயலாளர் கங்காதரன் (பட்டிப்பளை மத்தியஸ்தத்தின் அங்கத்தவர்) உடனான கலந்துரையாடல் மிக பெறுமதியாக இருந்ததுடன் இளைஞர் யுவதிகளால் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் இன நல்லுறவினை முன்னுரிமைப்படுத்தி அவர் பதில் அளித்திருந்தமை விசேட அம்சமாகும்.
அத்துடன் வளவாளராக கலந்து கொண்ட ஜனாப் I.L.ஹாஷிம் ஸாலிஹ் (ஆளுநர் சபை உறுப்பினர், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு) இந்நிகழ்வினை சிறப்பாக வசதிப்படுத்தி இருந்தார் என்பதுடன் பல்வேறு விரிவுரைகளையும் நிகழ்த்தியிருந்தார்.
கலந்து கொண்டவர்கள்
மேலும் A.அகமட் சபீர், சமூக சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலகம், சம்மாந்துறை இக்கள விஜயத்தில் கலந்து இளைஞர்களிடையே மத நல்லிணக்கம் தொடர்பான பெறுமதியான கருத்துக்களை தெரிவித்ததுடன் இவ்வாறான களப்பயணத்தினை ஊக்குவிப்பதாகவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி எனவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் இக்களவிஜயத்தை GAFSO அமைப்பின் கள உத்தியோகத்தர்களான ஜனாப் M.R.றஸ்னி முஹம்மட் , திருமதி G.டொஜானி மற்றும் கள உத்தியோகத்தர்கள் சிறப்பாக ஒருங்கமைத்து மேற்பார்வை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


