வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகி, 12 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையினால் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த மஹோற்சவக் காலத்தை ஒட்டி, ஆலயத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான அடியார்களின் நலன் கருதியும், அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முகமாகவும் மட்டக்களப்பு மாநகர சபை பல்வேறு விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் கீழ் இன்றைய தினம் மாநகரசபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சிரமதான பணியில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, சுவாமி எழுந்தருளி தீர்த்தமாடுவதற்காக தீர்த்தக்குளத்திற்குச் செல்லும் வீதி மிகவும் குறுகியதாகக் காணப்பட்டமையால், அதனை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிகள் மாநகர சபையினால் பொறுப்பேற்கப்பட்டு, தற்போது அதன் இறுதிக்கட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்ற அதேநேரம் இன்று காலை மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு நோயின் தீவிரம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு, ஆலய வளாகத்தில் அடியார்களுக்கு டெங்குத் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு அமைய, இந்த ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றுதல், நீர் தேங்கி டெங்கு வீரியமடையக்கூடிய குழிகள் மற்றும் கிடங்குகளை மூடிப் பராமரித்தல் போன்ற துப்புரவுப் பணிகள் மாநகர சபையின் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இது தவிர, மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 20 வட்டாரங்களிலும் நிலவும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் வாராந்தம் வட்டாரங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.