காவல்துறை அதிபர் பிம்ஷானிக்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஆதரவு
இலங்கையின் முதல் பெண் துணை காவல்துறை அதிபர் பிம்ஷானி ஜாசின் ஆராச்சிக்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
பிம்ஷானி ஆராச்சியின் பதவியுயர்வுக்கு எதிராக 32 சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில் அவரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி மறந்து செயற்படுவதாக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
அனைத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிம்ஷானி ஜாசின் ஆராச்சிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து ஒற்றுமையுடன் செயற்படுவார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்தக்கருத்துக்கள் வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும், பிம்ஷானி ஜாசின் ஆராச்சியுடன் கைகோர்த்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்-
ரோஹினி விஜரத்ன, பெண்களுக்கு நியாயமற்ற முறையில் நடந்து கொள்வது என்பது நாடு முன்னேற தடைகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை பெண் பிரதமரை நியமித்து, ஒரு பெண் ஜனாதிபதியையும், ஒரு தலைமை நீதிபதியையும் தேர்ந்தெடுத்த முதல் நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண் துணை காவல்துறை அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு எதிராக செயற்படுவது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளனர்.



