பழிவாங்கும் நோக்கில் சக மாணவனுக்குத் தீமூட்டிய மாணவர்கள்!
கம்பளை பிரதேசத்தில் சக மாணவன் ஒருவனுடைய உடலில் தீமூட்டிய குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 13ம் திகதி கம்பளை, யட்டபாத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆரம்பப் பாடசாலை ஒன்றின் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பாடசாலை அலுவலகத்தில் இருந்த பெயிண்ட், தின்னர் என்பவற்றை திருடி கழிவறைக்குள் அவற்றைக் கலந்து தீமூட்டியுள்ளனர்.
தீயினால் எரிந்து காயம்
இதற்கிடையே அதில் ஒரு மாணவன் தின்னர் திரவத்தை போத்தல் ஒன்றில் அடைத்து தனது புத்தகப் பைக்குள் ஒளித்து வைத்துள்ளார்.
அதனைப் பற்றி பாடசாலை நிர்வாகத்திடம் இன்னொரு மாணவன் தகவல் அளித்துள்ளார்.
அதன்காரணமாக கோபமுற்ற சக மாணவர்கள் மூவரும் சேர்ந்து, தின்னரை போத்தல் ஒன்றில் ஊற்றி தீ மூட்டி, நிர்வாகத்திடம் தகவல் அளித்த மாணவன் மீது வீசியெறிந்துள்ளனர்.
இதன் போது குறித்த மாணவனின் கால்கள் இரண்டும் தீயினால் எரிந்து காயமடைந்துள்ளன.
மருத்துவர்களின் ஆலோசனை
அதனையடுத்து ஆசிரியர்கள் ஒன்றிணைந்து குறித்த மாணவனை குருந்துவத்தை கிராமிய மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்துள்ளனர்.
எனினும் மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கம்பளை போதனா வைத்தியசாலையில் குறித்த மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பாடசாலை நிர்வாகம், சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதன் காரணமாக இது தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.
எனினும் பாதிக்கப்பட்ட மாணவனின் சார்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
