அரச வைத்தியசாலைகளில் விசேட வசதிகளுக்கு அங்கீகாரம்
அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையால் நேற்றைய தினமே (08.05.2023) இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டினருக்காக, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான கட்டணம் செலுத்தும் அறைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
பொதுமக்களின் கோரிக்கை
அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவில் தெரிவித்திருந்தார்.
தனியார் வைத்தியசாலைகளில் செலவு அதிகமாக இருப்பதால், அரச வைத்தியசாலைகளிலும் கட்டணம் செலுத்தும் அறைகளை ஸ்தாபிக்குமாறு பொதுமக்கள் வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த திட்டம் முன்மொழியப்படுவதாக ஜனாதிபதி பாதீட்டு உரையில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதற்கட்டமாக தேசிய வைத்தியசாலைகளில் இந்த கட்டணம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.