வாழ்த்துச்சொன்னதால் விலகமாட்டேன்! தமிழரசுக் கட்சிக்குள் அடம்பிடிக்கும் இரண்டு கைகளைத் தூக்கித்தெரிவான முக்கியஸ்தர்!
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவின் போது பலர் இரண்டு கைகளையும் தூக்கி திருமலை முக்கியஸ்தரை வாக்களித்து தெரிவுசெய்யப்பட்டது யாவரும் அறிந்த விடயம்.
தெரிவின் போது நடைபெற்ற பல முறைகேடுகள் ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்து, மீண்டும் உரியமுறையில் வாக்கெடுப்பு நடைபெறவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களாலும், கட்சியின் அங்கத்தவர்களாலும் குறிப்பாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களாலும் எழுப்பப்பட்டு வருகின்றது.
மீண்டும், வாக்கெடுப்பு நடாத்துவது சம்பந்தமாக சில கட்சி முக்கியஸ்தர்கள் குறித்த முக்கியஸ்தரிடம் பேசிய போது, அதற்கு உடன்படமாட்டேன் என்று அவர் அடம்பிடித்ததாகத் தெரியவருகின்றது.
பதவியை என்னால் விடமுடியாது
“வெளிநாடுகளில் இருந்து பலர் எனக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டார்கள்… இனிமேல் அந்தப் பதவியை என்னால் விடமுடியாது..’ என்று அவர் உறுதியாகக் கூறிவருகின்றாராம்.
குறித்த முக்கியஸ்தர் பற்றிக் குறிப்பிடுகின்ற பலரும் அவரை ஒரு நல்ல நிர்வாகி என்றே கூறுகின்றார்கள்.
ஆனால் நியாயமற்றமுறையில் நடைபெற்ற ஒரு தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்பவர் எப்படி ஒரு நல்ல நிர்வாகியாக இருக்கமுடியும் என்று கேள்வி எழுப்புகின்றார்கள் திருகோணமலையைச் சேர்ந்த சில கட்சி உறுப்பினர்கள்.
குறித்த முக்கியஸ்தர் தெரிவுக்காக வாக்களித்த பலர் தமது இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்த நிறைய ஆதாரங்கள் வெளியாகிவருகின்ற நிலையில், வாக்கெடுப்பில் பல முறைகேடுகள் நடந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும் கூட, அந்தத் தெரிவு சரியானதே என்று கூறி பதவிக்காக ஒரு அநீதிக்குத் துணைபோவது ஒரு நல்ல நிர்வாகியின் குணாதிசமாக இருக்கமுடியாது என்று கூறினார் தமிழரசுக் கட்சியின் ஒரு முக்கிய பிரமுகர்.
செயலாளர் பதவி
கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள்தான் தன்னைத் தெரிவுசெய்தார்கள் என்பதை குறித்த முக்கியஸ்தர் உண்மையாகவே நம்பினால், ஏன் முறையான ஒரு வாக்கெடுப்புக்கு அவர் மீண்டும் செல்லமுடியாது என்ற கேள்வியையும் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.
‘கட்சிக்குத்தான் பொதுச் செயலாளரே தவிர பொதுச் செயலாளருக்காகக் கட்சி அல்ல… கட்சியின் ஜனநாயக விருப்பத்தெரிவாக அதனது செயலாளர் பதவி இருக்கவேண்டும் என்று குறித்த முக்கியஸ்தர் போன்ற ஒரு நல்ல நிர்வாகி விரும்பினால், அவர் மறுபடியும் நீதியான ஒரு தெரிவுக்கு தன்னை உடன்படுத்திக்கொள்ளவேண்டும்.
அல்லாவிட்டால் 'இரண்டு கைகள் தூக்கித் தெரிவான செயலாளர்' என்ற கறையை வரலாறு முழுவதும் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம் குறித்த முக்கியஸ்தரிற்கு உருவாகிவிடும் என்று தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரிற்கு ஆதரவாக வாக்களித்த பொதுக் குழு உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |