ஜே.வி.பியின் எழுச்சிக்கு அஞ்சி ரணில் எடுத்த தீர்மானம்!
கொழும்பு - காலிமுகத்திடலில் எந்தவோர் அரசியல் கூட்டமும் இசை நிகழ்ச்சியும் நடத்த முடியாது என்று ரணில் அரசு தீர்மானம் எடுத்தமைக்கு உண்மையான காரணம் ஜே.வி.பிக்கு எதிராகவே என்று ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற மே தினக் கூட்டத்தை காலிமுகத்திடலில் நடத்துவதற்குத்தான் ஜே.வி.பி. திட்டமிட்டிருந்தது.
இதேவேளை அதற்காக ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே ஜே.வி.பி. அனுமதியும் கோரி இருந்தது.
ஜே.வி.பியின் மக்கள் பலம்
இதன்போது ஜே.பி.பியினர் காலிமுகத்திடல் முழுவதையும் நிரப்பும் வகையில் மக்களை அழைத்து வருவதற்குத் திட்டமிட்டிருந்தனர். அவ்வாறு அழைத்து வந்தால் ஜே.வி.பியின் மக்கள் பலம் என்னவென்று நாட்டுக்குத் தெரிந்துவிடும்.
ஏற்கனவே ஜே.வி.பி. சில இடங்களில் முதலாமிடத்திலும், சில இடங்களில் இரண்டாமிடத்திலும் இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.
கொழும்பு நகர மண்டப வளாகம்
இந்தநிலையில் காலிமுகத்திடலை அவர்கள் முற்றாக நிரப்பினால் அவர்களின் பலம் வெளியே தெரிந்துவிடும் என்று அஞ்சித்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்படி முடிவை எடுத்துள்ளார் என்றும் சொல்லப்படுகின்றது.
இதனால் ஜே.வி.பியினர் மே தினக் கூட்டத்தை கொழும்பு நகர மண்டப வளாகத்தில் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
