முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ள பிரித்தானிய பிரதமர்
ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தான் அஞ்சுவதாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைன் நிலைமை குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்கா, இத்தாலி, போலந்து, ருமேனியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய ஆணையம் மற்றும் நேட்டோ தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ரஷ்யாவால் உக்ரைனில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தாம் அஞ்சுவதாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் நேச நாடுகளிடம் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க முடிவெடுத்தால், கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை நேட்டோ நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,ரஷ்ய படையெடுப்பு பற்றிய வதந்திகளுக்கு மத்தியில் உக்ரைனில் உள்ள பிரித்தானிய மற்றும் பிற வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்..
உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் பதற்றம்! - பிரித்தானியார்களை உடன் வெளியேறுமாறு உத்தரவு