உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் பதற்றம்! - பிரித்தானியார்களை உடன் வெளியேறுமாறு உத்தரவு
ரஷ்ய படையெடுப்பு பற்றிய வதந்திகளுக்கு மத்தியில் உக்ரைனில் உள்ள பிரித்தானிய மற்றும் பிற வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பு பல குடும்பங்களை கடினமான இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், பலர் நாட்டை விட்டு வெளியேற முடியாத சிக்கல் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையிலேயே, உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
தீவிரம் அடையும் உக்ரைன் - ரஷ்யா பதற்றம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதை தடுக்க ஐக்கிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது.
சோவியத் யூனியனில் அங்கம் வைத்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும். ஆனால், எல்லை பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை அளித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை சிறிது சிறிதாக குவித்து வருகிறது.
இதுதொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்ட போதிலும், ரஷ்யா படைக்குவிப்பை நிறுத்தவில்லை. போர் நடத்துவதற்கு தேவையான சுமார் 70 சதவீத பணிகளை ரஷ்யா செய்து முடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் சுமார் ஒரு இலட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
பைடன் மற்றும் விளாடிமிர் புட்டினும் இன்று சில மணி நேரத்தில் பேச்சு
உக்ரைன் பதற்றம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இன்று சில மணி நேரத்தில் கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், ரஸ்ய ஜனாதிபதி புட்டினுடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், கலந்துரையாடியுள்ளார். இதன்போது, உக்ரைன் மீதான பதற்றச் சூழ்நிலைக்கு மத்தியில் , நேர்மையான பேச்சுக்கள் பொருந்தாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக ரொயட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்று எச்சரிக்கையின் மத்தியில், விரோதத்தை தவிர்ப்பதற்காகவே பைடனும், புட்டினும் பேச்சு நடத்தவுள்ளனர்.