உக்ரைனில் அணுமின் நிலையத்தில் தாக்குதலால் அச்சம் - முழு உலகிற்கும் ஆபத்து
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தாக்குதல் நடத்தி உலகம் முழுவதையும் அச்சுறுத்த ரஷ்யா முயற்சிக்கிறது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 170 நாட்களை அடைந்து இருக்கும் நிலையில், மார்ச் மாத தொடக்கத்தில் ரஷ்ய படைகள் Enerhodar நகரை கைப்பற்றி ஜபோரிஜியா அணு ஆலையையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
இருப்பினும் அதன் உக்ரைனிய ஊழியர்கள் மட்டும் ஆலையில் அணுசக்தி நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் பேரழிவு விளைவுகளை தவிர்க்க அப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ( Antonio Guterres) வேண்டுகோள் விடுத்தார்.
ஐநாவின் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்கான அழைப்பை அமெரிக்கா ஆதரித்தது மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தளத்தைப் பார்வையிட வலியுறுத்தியது.
இந்தநிலையில் தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியாவில் (Zaporizhzhia) கதிரியக்க பொருட்களை சேமித்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் ரஷ்ய ராணுவம் வியாழன்கிழமை ஐந்து முறை தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியது.
இதனைத் தொடர்ந்து வழக்கமான இரவு உரையில் பொதுமக்களிடம் பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யா புதிய தாழ்வு நிலையை எட்டியுள்ளது மற்றும் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்துவதன் மூலம் முழு உலகையும் ரஷ்யா அச்சுறுத்த முயற்சிக்கிறது எனத் தெரிவித்தார்.