தமிழர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி
மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(06.10.2026) இடம்பெற்றுள்ளது.
கிண்ணியடி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய சாமித்தம்பி குமாரசிங்கம் எனும் மேசன் தொழிலாளியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சந்திவெளி பிரதான வீதியை அண்மித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடு ஒன்றுக்கு சம்பவ தினமான இன்று காலை இரு மேசன் தொழிலாளர்கள் கொங்கிறீட் கொட்டுவதற்காக சட்டிங் (பலகை) அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அருகிலுள்ள சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிண்ணையடியைச் சேர்ந்த சாமித்தம்பி குமாரசிங்கம் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்ததுடன் படுகாயமடைந்த மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


