நுவரெலியா தலகல ஓயா ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
நுவரெலியா கிரகறி வாவிக்குச் செல்லும் தலகல ஓயா ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று(25.01.2025) மீட்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர், நுவரெலியா மாநகரசபையில் தொழில் புரிந்து வரும் ஹாவாஎலிய பிரதேசத்தினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் நடராஜ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
பொலிஸாருக்கு அறிவிப்பு
முன்னதாக சடலமாக மீட்க்கப்பட்டவர் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிளானது, நேற்று இரவு நுவரெலிய மத்திய மாகா வித்தியாலய பகுதியில் இருந்து பொருளாதார மத்திய நிலையத்தை இணைக்கும் உடப்புசல்லாவ குறுக்கு வீதி பகுதியில் கிடப்பதை அவதானித்த பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளொன்றும் அவர், அணிந்திருந்த தலைக்கவசமும் கிடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நுவரெலியா மாநகரசபையின் தீயனைப்பு பிரிவினருக்கு அறிவித்து தேடுதலை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் விபத்துக்குள்ளான நபர் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காமையால் மோட்டார் சைக்கிளை மாத்திரம், பொலிஸார் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை
இந்ந நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்க்கப்பட்ட இடத்தில் இன்று காலை உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடத்திய போது கிரகறி வாவிக்குச் செல்லும் தலகல ஓயா ஆற்றில் சடலமாக அவர் மீட்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்த அவர்களும், மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், மாவட்ட நீதிமன்ற நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணத்தில் விசாரணையை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |