4 வயது மகளை அடித்து துன்புறுத்திய தந்தைக்கு சிறை
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய தந்தைக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத பெண்ணை, சுருவிலை சேர்ந்த நபர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.
கணவன் - மனைவி கருத்து முரண்பாடு
அவர்களுக்கு 4 வயதில் மகள் இருந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை அடுத்து, மனைவி கணவனை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முற்பகுதியில் மனைவி விட்டு சென்ற நிலையில், தன்னுடன் இருந்த மகளை மிக மோசமாக சித்திரவதை புரிந்து, அடித்து துன்புறுத்தி அதனை காணொளியாக சமூக வலைத்தளங்களில் சிறுமியின் தந்தை பகிர்ந்து உள்ளார்.
ஊர்காவற்றுறை நீதவானின் கவனத்திற்கு காணொளி சென்றதை அடுத்து, ஊர்காவற்றுறை பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சிறுமியை தாக்கிய நபரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டு இருந்தார்.
சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு
அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியை தாக்கிய நபரை கைது செய்ததுடன், சிறுமியையும் மீட்டுருந்தனர்.

மீட்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கு பின்னர், சிறுவர் நன்னடத்தை பிரிவின் ஊடாக சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டதுடன், சிறுமியின் தந்தை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்ட நிலையில், சிறுமியை தாக்கிய தந்தையை குற்றவாளியாக கண்ட மன்று அவருக்கு இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுவர் காப்பக பராமரிப்பில் வளர்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |