சம்பூரில் சூரிய மின்சக்தி உற்பத்தியால் விவசாய நிலங்களை இழந்த விவசாயிகள்
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் மக்களின் விவசாய நிலங்களும் தற்போது அபகரிக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு மாகாணத்தில் இந்த நிலை தமிழ் பேசும் மக்களை குறி வைத்து நில அபகரிப்பு தொடர்கிறது. இதில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் கிராம மக்களும் எதிர்கொண்டுள்ளனர்.
சூரிய மின் சக்தி திட்டம் என்ற போர்வையில் குறித்த மக்களின் விவசாய காணியும் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக அப் பகுதியில் வசிக்கும் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சூரிய மின் உற்பத்தி நிலையம்
சம்பூரில் கடந்த கால அரசாங்கம் மூலமாக அனல் மின்சார நிலைய உற்பத்தியை ஆரம்பிக்க இருந்த போதிலும் மக்களின் பலமான எதிர்ப்பினால் அதனை கைவிட்டார்கள்.தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிப்பதற்கான சூரிய மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் மெய்நிகர் வழியாக இதனை ஆரம்பித்து வைத்தார்.
திருகோணமலையில் வலுசக்தி மையத்தை மேம்படுத்தும் நோக்கில் இத் திட்டத்தை ஆரம்பித்தாலும் மக்களின் விவசாய காணிகள் இதன் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
"இலங்கை இந்தியா இடையிலான நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு " எனும் கருப்பொருளின் கீழ் மொத்தமாக வலுசக்தி, டிஜிடல் மயமாக்கல், பாதுகாப்பு ,சுகாதாரம் உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள் இதன் போது பாரதப் பிரதமருடன் ஜனாதிபதி அநுரகுமார ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டன.
குறித்த பகுதியில் இந்த திட்டத்தை மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர அங்கு சென்று பார்வையிட்டு சென்றார். இது இவ்வாறு இருக்க இதனை தடுக்கோரியும் தங்கள் காணிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரி ஆளுனர் செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பிலும் அண்மையில் ஈடுபட்டதுடன் மனுவையும் கையளித்த நிலையில் எவ்வித தீர்வும் இன்றிய நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதுடன் விவசாய செய்கைகளையும் கைவிட்டுள்ளார்கள்.
குறித்த சூரிய மின் சக்தி திட்டத்தை இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் (NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான திருகோணமலை மின்சார நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் நிலையம், நீண்டகால மின் உற்பத்தி திட்டமாகும்.
இவ் விரிவாக்கத் திட்டத்தின் (LTGEP) கீழ் நிறுவப்படவுள்ள வடகிழக்கு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வலயத்தின் ஒரு பகுதியாக இது காணப்படுகிறது.
விவசாயம்
சம்பூர் சூரிய மின் நிலையத் திட்டம் இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டம் 2027 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 500 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 50 மெகாவாட் மின்சாரம் நாட்டின் தேசிய மின்சார விநியோகத்தில் இணைக்கப்படும்.
N-type TOPCon solar cells என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவப்படும் இந்த திட்டம், வலுசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும், நாட்டின் வலுசக்தி அமைப்பை புதைபடிவ எரிபொருட்களை நம்புவதற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை நோக்கி மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அப் பகுதியில் உள்ள மக்கள் வாழ்வாதாரமாக விவசாயம்,சேனைப் பயிர்ச் செய்கை, தோட்டம், கால் நடை வளர்ப்பு என பல அன்றாட ஜீவனோபாய தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் பெரியளவில் தற்போது முடக்கப்பட்டுள்ளது.
சம்பூர்,கடற்கரை சேனை , சந்தோசபுரம்,சூடைக் குடா, நவரட்ணபுரம்,சம்புக்களி போன்ற கிராம மக்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்துக்கும் மேற்பட்ட நீர்ப்பாசன குளங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கால கட்டத்தில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் யுத்த நிலையின் பின் உயர் பாதுகாப்பு வலயம் என கூறி கடற்படை முகாமிட்டு அங்குள்ள விவசாய காணிகள் உட்பட மக்களது தனியார் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சூரிய மின் சக்தி திட்டம் காரணமாக விக்னேஸ்வரா சம்மேளனம், இறைமதி சம்மேளனம், வளர்மதி சம்மேளனங்களை சேர்ந்த சம்புக்குளம்,இலுப்பை குளம், புலவன் குளம், ஆனைக்கன் குளம் ,பூலாவடிக்குளம் போன்ற விவசாய குளங்களும் சூரையாடப்பட்டுள்ளது.
கைது
விவசாய காணியில் 400க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 545 ஏக்கரில் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட அப் பகுதி விவசாயியான நமச்சிவாயம் சிவபாதம் தெரிவிக்கையில் " இரண்டு ஏக்கர் தனியார் உறுதி காணியில் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த எண்ணிய போதும் அது நிறைவேறவில்லை.
விவசாயம் செய்வதற்காக அங்கு சென்ற போது மின்சார சபையினரின் காணி என கூறி பொலிஸார் என்னை கைது செய்தனர். மூன்று வருடங்களாக விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறான சம்பவம் இடம் பெற்றது என தெரிவித்தார்.
பாடசாலை செல்லும் இரு பெண் பிள்ளைகள் இவருக்கு இருந்த போதிலும் காணியை கையகப்படுத்திய நிலையில் தற்போது வேறு கூலித் தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குறித்த விவசாயியான ஒரே ஒரு கோரிக்கையாக மீள தனது காணியை தருமாறு கோருகின்றார்.
மேலும் மற்றுமொரு விவசாயியான சித்ரவேல் கிருபானந்தராஜா கூறுகையில் "2017ல் சொந்த உறுதி காணிக்குல் விவசாயம் செய்து வந்த நிலையில் மின்சார சபைக்கு சொந்தமான காணி என வெளியேற்றினர்.விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்டு வாழ்ந்து வந்தோம் ஆனால் இவ்வாறாக நில அபகரிப்பு செய்யப்பட்டால் வேறு எந்த தொழிலை செய்வது எமக்கு வேறு தொழில் தெரியாது என்றார்.
குறித்த விவசாயி சிறிய கடை ஒன்றை தற்போது நடாத்தி வந்தாலும் போதுமான வருமானமின்றி உள்ளார். இவர் போன்ற அப்பாவி ஏழை விவசாயிகளின் காணிகளை அபகரிப்பதை தற்போதைய ஆளும் அநுரகுமார அரசாங்கம் நிறுத்த வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மக்கள் காணிகளை சூரையாடுவதை விடுத்து ஏனைய காணிகளை பெறலாம் என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் இது குறித்து சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் (PCCJ) உத்தியோகத்தர் தெரிவிக்கையில் " இங்கு மேற்கொள்ளப்படும் சூரிய மின் சக்தி திட்டம் என்பது நல்ல விடயம் ஆனால் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் விவசாய நிலத்தை கையகப்படுத்தி அவர்களின் ஜீவனோபாயத்தை அழித்து செய்வது ஆரோக்கியமானதல்ல,.
இவ்வாறான மக்களின் பரம்பரை பரம்பரை தொழிலாக விவசாயம்,கால் நடை காணப்படுகிறது. இதன் மூலம் 505 ஏக்கர் மக்கள் காணிகளை பெற்று அபிவிருத்தி செய்வதை ஏற்க முடியாத நிலையில் உள்ளது. ஐந்து சிறிய குளங்களும் இதில் அடங்குகின்றன.
கோரிக்கை
எவ்வளவோ காணிகள் இருக்கும் போது சம்பூர் மக்கள் விவசாய காணியை அபகரிப்பது நல்ல விடயம் அல்ல இதனால் அம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய விளை நிலங்களை இதன் மூலம் மழுங்கடிக்கச் செய்கிறது. அரசாங்கத்துக்கு நாம் கூறும் பரிந்துரையாக இவ்வாறாக விவசாயிகளின் காணிகளை விடுத்து தரிசு நிலங்களில் இதனை மேற்கொள்ள முடியும்.
உதாரணமாக புல்மோட்டை திரியாய் கடற்கரையை அண்டிய களப்பு பகுதியில் சூரிய மின் சக்தி நடை முறைப்படுத்தலாம் அது போன்று குறைந்த முதலீட்டில் அரச திணைக்களங்கள், பாடசாலைகளில் உள்ள கூரைகளில் சூரிய சக்தி திட்டங்களை மேற்கொள்வதனாலும் மின் உற்பத்திகளை இலகுவாக நாட்டின் தேவை கருதி பெற்றுக் கொள்ளலாம்" எனவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்கள் அதிகமாக அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் இந்திய கம்பனிகளுக்காக வழங்கப்பட்டதை அடுத்து பல வீதிப் போராட்டங்களையும் ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளும் தங்களது விவசாய விளை நிலங்கள் சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தாரை வார்க்கப்பட்டதையடுத்து அப் பகுதி விவசாயிகளும் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் திருகோணமலை மாவட்டத்தில் பிரதியமைச்சராக உள்ளவர் கடந்த கால அரசாங்கத்துக்கு அப்போது அதிகாரத்தில் இல்லாத நிலையில் இந்திய கம்பனிகளுக்கு திருகோணமலை வளங்களை அநியாயமாக அரா விலைக்கு தாரை வார்க்கின்றனர். இதனை நிறுத்த வேண்டும் என பல தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.
ஆனால் ஆளும் தரப்பில் இப்போது உள்ள நிலையில் மௌனித்து விட்டார் போல தெரிகிறது. எனவே தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் விவசாய நிலங்களை மீளப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட சமூகத்தின் ஒரேயொரு கோரிக்கையாக உள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 14 October, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
