வெள்ள அனர்த்தம் காரணமாக விவசாயிகளின் நெற்செய்கை பெரும் பாதிப்பு
கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் காரணமாக விவசாயிகளின் நெற்செய்கைக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில், வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை மாவட்ட அரசாங்கதிபர் பார்வையிட்டார்.
கடந்த 28ம் திகதி ஏற்பட்ட டித்வா புயல் தாக்கம் காரணமாக இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தமையால் வான் கதவு திறந்து விடப்பட்டமையால் தாழ் நிலப்பகுதிகளான பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, பெரியகுளம் போன்ற பகுதிகளில் பல ஏக்கர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.
நெற்செய்கை பாதிப்பு
வெள்ள நீர் வடிந்த பின்பு சில வயல்கள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளன.இவற்றை ஆராயும் நோக்கில் மாவட்ட அரசாங்கதிபர் பெரியகுளம் பகுதிக்கு சென்று அழிவடைந்த நெல் வயல் நிலங்களை பார்வையிட்டார்.

அரசாங்கதிபருடன் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் உள்ளிட்டோர்.பார்வையிட்டனர்.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அழிவுக்கான கொடுப்பனவு
விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், கடந்த 28-ம் திகதி ஏற்ப்பட்ட வெள்ளம் தற்பொழுது நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு 45 நாட்கள் கடந்த நிலையில் காணப்படுகின்ற இவ்வாறான நிலையில் கடந்த காலங்களிலும் இரணைமடு குளத்தின் நீர் வடிந்துதோடும் பகுதிகளில் உள்ள பல விவசாயிகளின் நெற்செய்கை முற்று முழுதாக அழிவை ஏற்படுத்தியது.

இதற்கான கொடுப்பனவும் முற்று முழுதாக விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறவில்லை.
தற்போதைய அரசாங்கம் எமக்கு ஏற்பட்ட அழிவுக்கான கொடுப்பனவை முற்றும் முழுதாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குறித்த இழப்பீடு கிடைக்கப்பெறுமாயின் தொடர்ச்சியாக நற்செய்தி மேற்கொள்ளக்கூடிய நிலை உருவாகும். இல்லையேல் விவசாயிகளின் வாழ்வாதாரம் அற்ற நிலையிலே காணப்படும் என தெரிவித்தனர்.