முல்லைத்தீவில் பாசியால் விவசாயிகள் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு
முல்லைத்தீவில் வயல் நிலங்களினுள் வெள்ளத்துடன் உள்நுழைந்த சல்வீனியா பாசியினால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு பொருட்செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வயல் நிலங்களில் மேற்கொண்டிருந்த விதைப்புகளினால் வளர்ந்த பயிர்கள் உரிய காலத்தில் கிடைக்காத மழையினால் கருகியிருந்தன.இப்போது மழைநீருடன் வயல் நிலங்களில் உட்புகுந்த பாசி பயிர்கள் மீது படிந்திருக்கின்றன.
இவற்றை அகற்றுவதற்கு பல நாட்கள் எடுக்கக்கைடிய நிலையில் இவை இரட்டிப்புச் செலவை ஏற்படுத்தவல்லன என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குளங்களுக்கு அண்மையில் உள்ள பல வயல் நிலங்களில் சல்வீனியாவின் உள்நுழைவினால் ஏற்படும் நெருக்கடி அதிகமாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் கட்டை வயல்வெளி
முல்லைத்தீவில் நந்திக்கடல் பகுதியில் மூன்றாம் கட்டை வயல்வெளிகளினுள் இம்முறையும் அதிகமான சல்வீனியா பாசிகள் வந்தமையால் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் அதிகமாக வர நந்திக்கடல் நீர் மட்டம் மிகையாக உயர்ந்து சென்றது.அதனுடன் பாசிகளும் மிதந்தன.நந்திக்கடல் மூன்றாம் கட்டைப் பாலத்திற்கு கீழ் உள்ள தேங்கிய நீரில் அதிகளவு சல்வீனியா வளர்ந்திருந்தது.அவை வெள்ளத்துடன் சேர்ந்து வயல் நிலங்களினுள் பரவியிருந்தது.
மெதுவாக வடிந்து சென்ற வெள்ளம் சல்வீனியா பாசிகளை வயல் நிலங்களில் பயிர்கள் மீது விட்டுச் சென்றுவிட, அவை பயிர்களை அமர்த்தியபடி இருக்கின்றன.
கூலியாட்களை போட்டு அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் பேசியவர் குறிப்பிடுகின்றார்.
வழமையிலும் இம்முறை இது அதிகமாக இருக்கிறது.பதினொரு வயல்களை முற்றாக பாசி சேர்ந்து முடியுள்ளது.இதுபோலவே அருகிலுள்ள ஏனையவர்களின் வயல்களிலும் நிலைமை கடினமானதாகவே இருக்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாசிகளும் சப்பும்
வயல் நிலங்களில் சம்பு வகை நீர்ப்புல் நீருடன் அடித்து வரப்பட்டு போடப்படடுள்ளது.சம்பு புல் வேருடன் காணப்படுவதையும் அவதானிக்கலாம்.
மூன்றாம் கட்டைப் பாலத்திற்கு அருகில் உள்ள வயலில் அதிகளவில் இந்த அவதானிப்பை பெற முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
சல்வீனியா பாசியுடன் சம்பு புல்லுமாக வயல் நிலம் முழுவதும் சிதறியிருக்கும் சூழலில் அவற்றை அகற்றும் பணிகளில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
என்னதான் தீர்வு
இந்நிலைமையினை கடந்தாண்டும் விவசாயிகள் எதிர் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நந்திக்கடலின் நீர்வரத்து அதிகமாகும் போதெல்லாம் வயல் நிலங்களில் சல்வீனியா புகுந்து விடுவதாக விவசாயிகள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
இந்நிலையை தவிர்ப்பதற்கு நந்திக்கடல் பகுதியில் சல்வீனியா நீர்க் களையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
விவசாய நிலங்களுக்கும் நந்திக்கடல் நீரேரிக்கும் இடையில் சல்வீனியா, உயரும் நீர் மட்டத்தோடு வயலுக்குள் வருவதை தடுக்கும் வகையில் பிரிப்பு வேலியை அமைக்கலாம். எனவும் இந்நிலைமைகளை அவதானித்த துறைசார் அதிகாரிகள் சிலருடன் உரையாடிய போது அவர்கள் இவ்வாறு தம் முன்மொழிவுகளை எடுத்துரைத்தனர்.
எது எவ்வாறாயினும் வயல் நிலங்களில் சல்வீனியா நீர்களை உட்புகுதல் விவசாயிகளுக்கு இரட்டிப்புச் செலவினை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது.
விவசாய மேம்பாட்டுத் திட்டங்களில் நீர்க் களைகளை கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் அடங்கிய செயற்றிட்டங்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.அவ்வாறிருந்தால் குறைந்தளவுக்கேனும் விவசாயிகளுக்கு உதவியாக அமையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |