சூரிய சக்தி மின் திட்டத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் முத்துநகர் மக்கள்.. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
திருகோணமலை, முத்துநகர் கிராமத்தில் சூரிய சக்தி மின் திட்டத்தால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (17) விடுத்துள்ள அவசர ஊடக அறிக்கையில், முத்துநகர் பகுதியில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் தமது வாழ்வாதாரத்திற்காகப் பல தலைமுறைகளாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், அங்கு முன்னெடுக்கப்படும் சூரிய சக்தி மின் திட்டத்திற்காக மக்களின் விவசாயக் காணிகள் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமானவை என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. தங்களின் பாரம்பரிய பூர்வீகக் காணிகளைப் பாதுகாக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டங்களையும் அதிகாரிகளுடனான சந்திப்புகளையும் மேற்கொண்டு வந்த போதிலும், இதுவரை அரசாங்கத்தரப்பிலிருந்து எந்தவொரு நீதியான தீர்வும் வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
தற்போதுள்ள நிலவரப்படி, மேலும் சுமார் 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட விவசாய நிலங்கள் வேலி அடைக்கப்பட்டு, சூரிய சக்தி திட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீர்வு வேண்டும்
இந்த திட்டத்தினால் விவசாயிகள் மட்டுமன்றி, அப்பகுதியில் வாழும் கடற்றொழில் குடும்பங்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முத்துநகர் பகுதியில் வாழும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடலுக்குச் செல்வதற்காகப் பயன்படுத்தி வந்த பிரதான வீதி இந்த சோலார் திட்டத்திற்காக மறைத்து மூடப்பட்டுள்ளது. இதனால் கடற்றொழிலாளர்கள் தங்களின் அன்றாடத் தொழிலை முன்னெடுக்க முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இது அவர்களின் குடும்பப் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளது. நஷ்டஈடோ மாற்றுத் திட்டமோ இல்லை இவ்வாறு பலாத்காரமாக வாழ்வாதாரக் காணிகளை இழந்து நிர்க்கதியாகி நிற்கும் முத்துநகர் மக்களுக்கு, இதுவரை மாற்றுத் தகுந்த காணிகளோ, முறையான நஷ்டஈடுகளோ அல்லது அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான மாற்றுத் திட்டங்களோ அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்கிடமான விடயமாகும்.
எனவே, முத்துநகர் கடற்றொழிலாளர்கள் தமது தொழிலுக்காகப் பயன்படுத்தி வந்த, தற்போது மூடப்பட்டுள்ள கடற்கரைச் செல்லும் பிரதான வீதியை உடனடியாகத் திறந்து மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக தகுந்த மாற்று விவசாயக் காணிகள் உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும்.
அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயற்பாடுகளை விடுத்து, உள்ளூர் மக்களின் பங்களிப்புடனும் இணக்கப்பாட்டுடனும் மாற்று வழிகள் ஆராயப்பட வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பது ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் முதன்மைக் கடமையாகும். எனவே, இந்த விடயத்தில் அரசாங்கமும் உரிய உயர்மட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, முத்துநகர் மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவ்வறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.