விவசாய நிலங்களுக்கு செல்வதே தீர்வு - அதிகாரிகளின் செயலால் அதிருப்தி வெளியிட்ட பண்ணையாளர்கள்
மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் அத்துமீறிய விவசாயிகளுக்கு ஆதரவாக, தமது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதால் நாங்கள் தற்போது நிர்கதியாக்கப்பட்டுள்ளோம் என மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மட்டுக்களப்பு ஊடக அமையத்தில் மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் அமைப்பின் தலைவர் சீ.நிமலன் ஊடகச் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில், மேற்கண்டவாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் அமைப்பினர் மற்றும் மகாவலி, வன இலாகா அதிகாரிகளுக்கிடையிலான கூட்டம் இடம்பெற்றது.
நிர்கதியாக்கப்பட்ட பண்ணையாளர்கள்
இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பண்ணையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் அத்துமீறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனால் எங்களது கால்நடைகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமது வாழ்வாதாரத்தையும் கால்நடைகளையும் பாதுகாப்பதற்கான உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், தமது கால்நடைகளைத் தத்தமது விவசாய நிலங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

விவசாய நிலங்களுக்கு செல்வதே தீர்வு
கால்நடைகளைப் பராமரிப்பதற்காகத் தங்களை அடர்ந்த காட்டுக்குள் செல்லுமாறு கூறுவது நடைமுறைச் சாத்தியமற்றது, தற்போது மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இவ்வாறான சூழலில் கால்நடைகளைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கான இடம்கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது, இதற்கான பொறுப்பை விவசாய அமைப்புகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு விவசாயியும் தமது வயல்களில் கால்நடைகளைக் கட்டிவைத்துப் பராமரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது, கால்நடைகளை அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்று பராமரிப்பது பாதுகாப்பான தீர்வாக அமையாது என்றார்கள்.